Judge jayachandran quash Lookout notice

ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிக வட்டி தருவதாக கூறி, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி, திரைத்துறையை சேர்ந்த மாநில பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது.

அதன்படி ஆஜராகாததால், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிறப்பித்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். கே. சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆரூத்ரா மோசாடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும் மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும், நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்ததுடன், சென்னை திரும்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி டிசம்பர் 10ஆம் தேதி சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி முன்பு விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் லுக் அவுட் நோட்டீசை எதிர்த்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆர்.கே.சுரேஷ் அளித்த வாக்குமூலம், ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாகவும், விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.சுரேசுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி, மீண்டும் விசாரணை தேவைப்பட்டால் புதிதாக சம்மன் அனுப்பும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...