Judge nirmal kumar j தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினரிடம் தகராறு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைவர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் மார்ச் 12ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதனால் கடம்பூர் ராஜுவுடன் சென்றவர்களுக்கும், பறக்கும்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணியில் இருந்த தன்னை மிரட்டியதாக மாரிமுத்து அளித்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், காவல்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜூ வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கியதுடன், வாகனத்தை முழுமையாக சோதனை செய்ய ஒத்துழைத்ததாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...