Judge sounder order in cooperative case நீதிபதி சவுந்தர் கூட்டுறவு சங்க வழக்கில் உத்தரவு.

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, உறுப்பினர்களின் பதவிக்காலம் துவங்குகிறது எனவும், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019ம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதாக கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க அதிகாரியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வரும் என கூறி, 2024ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட அரசுக்கு தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.சவுந்தர் விசாரித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்தல் நடந்த போதும், நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகே, சங்கங்கள் செயல்பட துவங்குகின்றன என்பதால், அதன்பிறகே ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் துவங்குகிறதே தவிர, உறுப்பினர் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அல்ல என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி, சங்கங்களின் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தான் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் துவங்குகிறது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில், உறுப்பினர்களின் பதவிக்காலம், எந்த தேதியில் இருந்து ஐந்து ஆண்டு பதவிக்காலம் துவங்குகிறது எனக் கூறப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக்காலம் துவங்குவதாக கருத முடியும் எனவும், நிர்வாகிகள் தேர்தலுக்கு பிறகு தான் துவங்குகிறது எனக் கூற முடியாது என தெரிவித்து, நிர்வாகிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சில காரணங்களுக்காக உடனடியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து, சங்கம் செயல்பாட்டுக்கு வர முடியவில்லை என்பதற்காக, பதவிக்காலத்தை நீட்டிக்க முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may also like...