madras high court june 28 news

சென்னை, ஜூன்.28-

சென்னை ஐகோர்ட்டில், உள்ள மெட்ராஸ் பார் அசோசியேஷன் என்ற வக்கீல் சங்கம் உள்ளது. இந்த சங்க அலுவலகத்துக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற இளம் வக்கீல் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதுகுறித்து, அவரது தந்தை வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, இந்த சங்கத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த வக்கீல்களை உறுப்பினர்களாக சேர்ப்பது இல்லை என்று வக்கீல்கள் மோகன்தாஸ், மகாவீர் சிவாஜி ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த வக்கீல் சங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சாதி, மத, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், விண்ணப்பம் கொடுக்கும் வக்கீல்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். யானை ராஜேந்திரனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சங்கத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர், தனி நீதிபதி தீர்ப்பு வருகிற 3-ந்தேதி வரையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். தற்போதைய நிலை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதால், தனி நீதிபதி தீர்ப்பை அமல்படுத்த இடைக்கால தடை ஏற்பட்டுள்ளது.

………………….

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக வந்த
புகார் மீது இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை
ஐகோர்ட்டில், தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் பதில் மனு

சென்னை, ஜூன்.28-
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக வந்த புகாரின் மீது இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலம்
சென்னை கோடம்பாக்கத்தில் பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில், தமிழ்நாடு மாநில பா.ஜ.க., செயலாளர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி மற்றும் டிசம்பர் 13-ந்தேதிகளில் முரசொலி அறக்கட்டளைக்கு, எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், முரசொலி அறக்கட்டளை சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
விசாரிக்க வில்லை
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் சார்பில் பதில் மனுவை மத்திய அரசு வக்கீல் எஸ்.திவாகர் தாக்கல் செய்தார். அதில், ‘‘தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். முரசொலி அறக்கட்டளை, பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று புகார் வந்தது. அந்த புகாரை விசாரிப்பதற்காக முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்காமல், இந்த ஐகோர்ட்டில் அறக்கட்டளை வழக்கு தொடர்ந்துள்ளதால், மேற்கொண்டு ஆணையம் விசாரணை நடத்தவில்லை. எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கவில்லை’’ என்று கூறப்பட்டு இருந்தது.
தள்ளிவைப்பு
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக இருந்தார். அவர் வேறு ஒரு வழக்கில் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை ஜூலை 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
……….

சென்னை, ஜூன்.28-

செந்தில்பாலாஜி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக நிரூபித்தால், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் காரசாரமாக வாதிடப்பட்டது.

மனைவி வழக்கு

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதிகாரம் இல்லை

அப்போது முதலில் மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘கைதுக்கான காரணங்களை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட கைது மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் எனக்கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதன்மூலம் அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல் அவரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைதானவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை’’ என்று வாதிட்டார்.

அதிகாரிகளுக்கு சிறை

இவரை தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அவர் கூறியதாவது::-

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு ஏற்றுக்கொண்டு தான், அவரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையின் சட்டவிரோத காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆகுகிறது. மேலும், கோர்ட்டு காவலில் உள்ளதை எதிர்த்தோ அல்லது ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ அவர் மனு தாக்கல் செய்ய வில்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் உரிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். உரிய ஆதாரமின்றி கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை உள்ளது.

எந்திரத்தனம் இல்லை

செந்தில் பாலாஜியை உரிய ஆதாரமின்றி சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக நிரூபித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்.

கைதுக்கான காரணத்தை செந்தில்பாலாஜியிடம் தெரிவித்து கையெழுத்து போடச் சொன்னபோது அவர் மறுத்து விட்டார். அதன்பிறகு அதன்பின்னர், உரிய வழிமுறைகள் சட்டப்படி முறையாக பின்பற்றப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை எந்திரத்தனமானது அல்ல.

முடியவில்லை

காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு பிறப்பித்த நிபந்தனைகள் காரணமாக செந்தில்பாலாஜியை, எங்களால் தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து விசாரிக்க முடியவில்லை.

எனவே, தற்போது அவர் ஆஸ்பத்திரியில் உள்ள காலகட்டத்தை கோர்ட்டு காவலில் உள்ள காலகட்டமாக கருதக்கூடாது. தற்போது தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தாலும், அவர் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சுமத்தப்பட்ட முறைகேடு தொடர்பாகத்தான் அவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதை எப்படி அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூற முடியும்?.

சட்டத்தில் இடமில்லை

அவர் எங்களது விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு மற்றொரு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி தன் வாதத்தில், ‘‘தற்போது செந்தில் பாலாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை கோர்ட்டு காவலில் உள்ள காலகட்டமாக கருதக்கூடாது எனக்கூற சட்டத்தில் இடமில்லை. கைது செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்கு கோர்ட்டு காவல் எடுத்து விசாரிக்க வேண்டும். இல்லையென்றால், கொரோனா அல்லது பூகம்பமே வந்தாலும் கூட காவலி்ல் எடுத்து விசாரிக்க அனுமதி கோர முடியாது’’ என்று வாதிட்டார்.

விசாரிப்பது உரிமை

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்களை பெற வேண்டும் என்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிப்பது என்பது அமலாக்கத்துறையின் உரிமை. ஏற்கெனவே செசன்சு கோர்ட்டு அவரிடம் விசாரணை நடத்த 8 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட தீவிரமான மருத்துவ சிகிச்சை காரணமாக அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அதனால், இந்த காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களும் நேற்று மாலையில் முடிவடைந்தது. இதையடுத்து, இருதரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

………………

You may also like...