madras high court news

[01/02, 17:50] sekarreporter1: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில் ஆம்னி பேருந்து சங்கங்களுடன் வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எட்டப்படும் முடிவுகளை பிப்ரவரி 7 ஆம் தேதி தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆம்னி பேருந்துகள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோயம்பேட்டில் உள்ள தங்களது ஷெட்கள் அமைந்துள்ள இடத்தில் காலி பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமெனவும், மீண்டும் கிளாம்பாக்கத்திற்கு எடுத்துச்செல்லும் போது சென்னைக்குள்ளேயே குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். கோயம்பேடு முழுவதுமாக காலி செய்யப்பட்டு வேறு பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாவதாவும், முழுமையாக மூடிவிட்டால் பேருந்து நிலையமே இல்லாத நகரமாக சென்னை மாறிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை என விளக்கினார்.

குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் 3 மற்றும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கிளாம்பாக்கத்தில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கும் செல்ல 550 மாநகர பேருந்துகள் மூலம், 4 ஆயிரத்து 651 டிரிப்கள் என்ற அடிப்படையில் இயக்கப்படுகின்றன எனவும், வெளியூர் பயணிகள் எடுத்துவரும் சுமைகள் மாநகர பேருந்துகளில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில் சுமூக தீர்வு காணும் வலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 3) பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆம்னி உரிமையாளர்கள் தரப்பில் கிளாம்பாக்கத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 77 மட்டும் நிறுத்த முடியும், ஆனால் கோயம்பேட்டில் 380 நிறுத்த முடியும் என தெரிவித்தபோது, கோயம்பேடு 36 ஏக்கர் மட்டுமே என்றும், ஆனால் கிளாம்பாக்கம் 86 ஏக்கரில் உள்ளதாகவும், கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் புறப்படும் இடத்தில் 70 மற்றும் பார்க்கிங்க் ஏரியாவில் 300 என ஆம்னி பேருந்துகள் நிறுத்திவைக்கலாம் என விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கியதற்கு தமிழக அரசை பாராட்ட வேண்டுமென கூறிய நீதிபதி, எந்த திட்டமாக இருந்தாலும் அதில் உள்ள சில குறைபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும், அவற்றை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.

பயணிகள் சுமைகளை எடுத்துவருவதையும், வேறு பேருந்திற்கு மாறுவதையும், பண விரயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என தெரிவித்த நீதிபதி மஞ்சுளா, பேருந்துகளில் மாற்று திறனாளிகள் ஏறி இறங்குபதற்கும் மற்றும் வெளியூரிலிருந்து வரும் பயணிகளை சுமைகளை வைப்பதற்கும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினார்.
[01/02, 17:50] sekarreporter1: சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும், அப்படி சான்றிதழ் வழங்கினால் அதன் மூலம் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெற பாதிப்பை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கும்படி தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் வழங்க தாசில்தாரருக்கு அதிகாரம் வழங்கும் எந்த உத்தரவும் இல்லாத நிலையில், இந்த சான்றிதழை வழங்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், பள்ளி சேர்க்கை படிவங்கள் உள்ளிட்ட படிவங்களில் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடங்கியுள்ள பகுதியை பூர்த்தி செய்ய விரும்பாதவர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி , சாதி, மதத்தை குறிப்பிட விரும்பவில்லை என்றால் அந்த பகுதியை விட்டு விடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது. அதேசமயம், சாதி, மதமற்றவர் என சான்று பெறும்போது ஏற்படும் பின் விளைவிகளையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டால் எதிர்கால சந்ததியர் இட ஒதுக்கீட்டு பலனை பெறுவது பாதிக்கப்படும், வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
[01/02, 17:50] sekarreporter1: புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு தொடர்பான மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என அரசு முடிவெடுத்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய தலைமைச் செயலக கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து முந்தைய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்த பின், கடைசி நேரத்தில் வழக்கில் இணைக்கும்படி மூன்றாவது நபர் கோர முடியாது என்றும், இதுநாள் வரை வழக்கில் இணைக்க கோராத ஜெயவர்த்தன், வாபஸ் பெற முடிவு செய்த பின் வழக்கில் இணைக்க கோரியுள்ளது தவறு என்றும் மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசுக்கு உரிமை உள்ளது என்றார்.

ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கை தாக்கல் செய்தவர் வாபஸ் பெறுவதாக இருந்தால் எதிர்மனுதாரர் கூட ஆட்சேபம் தெரிவிக்க முடியாது என்ற நிலையில், மூன்றாம் நபர் எப்படி எதிர்க்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. மனுதாரரின் தந்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் புகார் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்காத நிலையில் அதன் பரிந்துரைகளை ஆதாரமாக கருத முடியாது என்றார்.

ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பொதுநலன் சம்பந்தப்பட்ட இந்த வழக்கை எப்படி வாபஸ் பெற முடியும்? உயர் நீதிமந்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் நீதிமன்றத்தை அணுகவில்லை என்றும், தற்போது அரசு எந்த காரணமும் தெரிவிக்காமல் வாபஸ் பெறக் கோருவதால் வழக்கில் இணைக்க கோருவதாக குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு செய்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்புக்கு கேள்வி எழுப்பியபோது, இந்த மாநிலத்தின் குடிமகன் என்ற முறையில் கோரிக்கை வைப்பதாகவும், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கை வாபஸ் பெற அரசு முடிவெடுத்ததாகவும், அதற்கு முன் வாபஸ் பெறும் எண்ணம் இல்லாததால் வழக்கில் இணைக்க கோரவில்லை எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, வாதங்களின் தொடர்ச்சிக்காக விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[01/02, 17:50] sekarreporter1: நீதிமன்ற வளாகத்தில் மொபைல் நெட்வொர்க்-களை மேம்படுத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தும்போது போதிய நெட்வெர்க் கிடைக்கவில்லை என்பதால், நெட்வொர்க்கை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருமுல்லைவாயலை சேர்ந்த வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்சாண்டர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை, செப்டம்பர் மாதங்களில் தமிழக அரசு, உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தககல் செய்துள்ள பொது நல மனுவில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து மொபைல் போன்களில் இணையதள சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றும், காணொலி மூலமாக மற்றொரு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக சிரமமாக இருப்பதாகவும், உயர் நீதிமன்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை கூட முழுமையாக பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளதால், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தர பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...