Madras high court news april 28

[4/29, 07:22] sekarreporter1: போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழு அரசு ஆயுஷ் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் முறையற்ற நியமனங்கள் காரணமாக அரசுக்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், போலி ஆவணங்களைக் கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்ற மணவாளனுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வராக மணவாளன் நீடிப்பது பொது நலனுக்கு எதிரானது என்பதால், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
[4/29, 07:22] sekarreporter1: வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தை அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சந்தைக்கு விவசாய பொருட்களையும், கால்நடைகளையும் விற்கவும், வாங்கவும் வருவோரிடம் ஒப்பந்ததாரர் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறார்.

கால்நடைகளுக்கு தலா நூறு ரூபாயும், 30 கிலோ காய்கறிகளுக்கு 50 ரூபாயும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாயும் நுழைவு கட்டணம் வசூலிப்பதாக கூறி, சீனிவாசன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அதிக நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை எனவும், நுழைவு கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, விவசாயிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிப்பது, உழவர் சந்தையின் நோக்கமே வீழ்த்தி விடும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் நியாயமான நுழைவுக்கட்டணம் வசூலிப்பதையும், ரசீது வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[4/29, 07:22] sekarreporter1: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஐந்து மொழிகளில் இன்று உலகெங்கிலும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை சட்டவிரோதமாக 3888 இணையதளங்களில் வெளியிடுவதை விதிக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சௌந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் தரப்பில் மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[4/29, 07:22] sekarreporter1: தேனி மக்களவை தொகுதியில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார்.

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர்
தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெறபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அதன்பின்னர் இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து வந்தனர். அனைத்து வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தள்ளிவைத்தார்.
[4/29, 07:22] sekarreporter1: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியும், அதன்பின்னர் தேர்தல் அறிவுக்கவும் தமிழக அரசுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, தகுதியில்லாத பலர், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாக அவசர கதியில் சேர்க்கப்பட்டதாகவும், தகுதியான உறுப்பினர்களை சேர்த்து, இறந்த மற்றும் தகுதியில்லாத உறுப்பினர்களை நீக்கி, திருத்தங்கள் மேற்கொள்ளும் வரை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்க தடை விதிக்க கோரி ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயரை நீக்கி, தகுதியான உறுப்பினர்களை சேர்த்து திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சங்கங்களின் உறுப்பினர் பட்டியலை திருத்தி அனுப்பும்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறைபாடுகளை நீக்காமல் நடத்தும் தேர்தல் நியாயமாக இருக்காது என்பதால் திருத்தப்பட்ட உறுப்பினர் பட்டியல் வெளியிட்ட பிறகே தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த
போது, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, உறுப்பினர் பட்டியல் திருத்தம் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, குறைகளை நிவர்த்தி செய்ய அரசு 6 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது என்றும், இது குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம் என குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உறுப்பினர் பட்டியலை திருத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கியும், அதன்பின்னர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[4/29, 07:22] sekarreporter1: கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் மதுரையில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமை மனு தாக்கல் செய்யலாம் என்றும், அவை வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், ஜி.கே.இளந்திரையன், எஸ்.சௌந்தர், அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி, சி.வி.கார்த்திகேயன், செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏ.ஏ.நக்கீரன், கே.குமரேஷ்பாபு, முகமது சபீக், பி.புகழேந்தி, சத்திகுமார் சுகுமார குரூப், வி லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.

இதேபோல, மதுரை கிளையில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.கலைமதி, என்.மாலா, டி.வி.தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா, பி.வடமலை ஆகியோர் விசாரிப்பார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.

வழக்கமாக விடுமுறை கால அமர்வுகளில் தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் வழக்குகளை விசாரிக்காமல், நிர்வாக பணிகளில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைக்கப்பட்ட கோடைகால அமர்வுகளில், கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகள் குறித்த வழக்குகள் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வே விசாரித்தது.

இந்நிலையில், தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மே 24ஆம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், கோடை கால அமர்வுகளில் சக நீதிபதியுடன் சேர்ந்து அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளார்.

அதன்படி மே 15 முதல் 21ஆம் தேதி வரை மதுரை கிளையில் நீதிபதி என்.மாலா உடன் கூடிய அமர்வில் வழக்குகளை விசாரிக்க உள்ளார். அதேபோல மே 22, 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நீதிபதி முகமது சபீக் உடன் கூடிய அமர்வில் வழக்குகளை விசாரிக்க உள்ளார்.
[4/29, 07:22] sekarreporter1: அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெற்ற தமிழக அரசு உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், பாதுகாப்பு வழங்குவது குறித்து எட்டு வாரத்தில் பரிசளித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்க கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி சந்திரசேகரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, சி.வி சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே எஸ் தினகரன் ஆஜராகி, உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது காவல்துறை பாதுகாப்பு பெற முடியும் என்கிற உரிமை மறுக்கப்படுவதாகவும், கொலை முயற்சி வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி உள்ள நிலையில் 18 மாதங்களாக போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று காவல்துறை தொடர்ந்து கூறி வருவதை சுட்டிக்காட்டி, ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெற வேண்டும் என்று காவல்துறை காத்திருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு முத்துமீரான், 2006 ஆம் ஆண்டு நடந்த தாக்கல் சம்பவத்தை தொடர்ந்து 18 ஆண்டுகளாக பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மாவட்ட காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாகவும், இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு மறு ஆய்வு குழுவின் முடிவின் அடிப்படையிலேயே பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக விளக்கம் அளித்தார். 2006 ஆம் ஆண்டு தாக்குதல் சம்பவம் நடத்திய பாமக-வுடன் அதிமுக தற்போது இணக்கமான சூழல் இருப்பதாலும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு எதிராகத்தான் புகார்கள் அளித்திருப்பதாலும், சண்முகத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருத வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதி இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், சி.வி.சண்முகத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்ற தமிழக அரசு உத்தரவை ரத்து செய்த உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ் பாதுகாப்பு கோரி சண்முகம் அளித்த மனுவை 8 வாரத்தில் பரிசளித்து முடிவெடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
[4/29, 07:22] sekarreporter1: சென்னையில் காபரே டான்ஸ் நடத்திய ரெஸ்டாரண்டிற்கு சீல் வைக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பால்ஸ் ரெஸ்டாரண்ட்டில் காபரே டான்ஸ் நடத்த 1980ஆம் ஆண்டு முதல் காவல்துறை உரிமம் வழங்கி வருகிறது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டிற்கு உரிமத்தை புதுப்பிக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை சென்னை மாநகர காவல்துறை நிராகரித்தது.

இதை எதிர்த்து ரெஸ்டாரண்ட்டின் உரிமையாளர் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காபரே நடனத்திற்கான உரிமத்தை புதுப்பிக்க உத்தரவிட வேண்டுமெனவும், புதுப்பிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

அதேசமயம், உரிமத்தை புதுப்பிக்க கூடாது என்றும், ரெஸ்டாரண்டை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பால்ஸ் ரெஸ்டாரண்டுக்கு சீல் வைக்க வேண்டுமென கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உத்தரவிட்டார். ரெஸ்டாரண்டிற்காக வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள விடுதிகள், கிளப்களில், ஆபாச நடனங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடக்கிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ராமசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, பால்ஸ் ரெஸ்டாரெண்டுக்கு எதிராக பதிவான வழக்கின் அடிப்படையிலேயே உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டி, அந்த வழக்கே ரத்து செய்யப்பட்ட பிறகு உரிமம் வழங்க மறுக்க முடியாது என கூறி, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

உரிமம் வழங்க மறுத்த சென்னை மாநகர காவல்துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், உரிமம் வழங்க கோரி ஒரு வாரத்தில் புதிதாக விண்ணப்பம் அளிக்கும்படி மனுதாரர் ராமசாமிக்கும், விண்ணப்பத்தை பெற்ற 2 வாரத்தில் அதை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...