Madras high court order december 23rd

[12/24, 11:47] Sekarreporter 1: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் சித்தளந்தூர் அத்தனூரம்மன் கோவில் நிலத்தில் கல்லூரி துவங்கும் நடைமுறைகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, சித்தளந்தூர் அத்தனூரம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில், அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, திருச்செங்கோட்டைச் சேர்ந்த தமிழரசி தெய்வசிகாமணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, அத்தனூரம்மன் கோவிலுக்கு சொந்தமான 14.5 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கர் நிலம் கல்லூரி அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கோவில் நிலத்தில் கல்லூரி அமைப்பதால் கோவிலுக்கு எந்த பயனும் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏழை மாணவர்களி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கல்லூரி அமைக்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு நிலம் ஒதுக்க அத்தனூரம்மன் கோவில் நிர்வாக குழு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் கல்லூரி துவங்க உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோவில் நிலத்தில் கல்லூரி துவங்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கல்லூரிகள் துவங்கியது அந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என இரு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி துவங்கும் நடைமுறைகள் தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, அறநிலையத் துறை ஆணையர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/24, 12:45] Sekarreporter 1: நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், நெடுக்காடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான கெத்தை அம்மன் கோவில், 1994ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுவன் பூசாரியாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுபோல பூசாரியாக நியமிக்கப்படும் சிறுவர்களால் பள்ளி செல்ல முடியாது என்றும், உணவை அவர்களே சமைத்து சாப்பிடுவது, கோவில் பசுக்களின் பாலை கறந்து நெய் எடுத்து விளக்குகளுக்குப் பயன்படுத்துவது போன்றவற்றால் கல்வி தடைப்படுகிறது என்றும், இது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தங்க வந்தனா பாலகிருஷ்ணன், சிறுவன் மற்றும் பெற்றோர் தரப்பில் ஏ.பாப்லி, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி.முத்துக்குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேய சந்துரு, அறநிலையத்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்

அப்போது, தமிழக அரசு தரப்பில் கோவில் மரபு படி சிறுவன் கோவிலை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும், தமிழகத்தில் வீடு தோறும் கல்வி திட்டம் மூலம் தற்போது மூன்றாம் வகுப்பு படிப்பதாகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் இ.எம்.ஐ.எஸ். எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறுவனுக்கு தடையற்ற கல்வி கிடைக்க வேண்டுமென்ற மனுதாரர் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரசு விளக்கத்தை ஏற்றுகொண்ட நீதிபதிகள், சிறுவனுக்கு தொடர்ந்து கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். சிறுவனின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிந்தால் குழந்தைகள் உரிமைகள் பாதுக்காப்பு ஆணையத்தை மனுதாரர் அணுகலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
[12/24, 17:35] Sekarreporter 1: நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை திருவொற்றியூரில் பழைய பொருட்கள் விற்பனை தொழில் நடத்தி வந்த ஏ ஹெச் எம் டிரேடர்ஸ் மற்றும் முகமது அலி அண்ட் கோ ஆகிய இரு நிறுவனங்களும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து இரு நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு, ஆக்கிரமிப்புகளை கண்டறிய டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், கட்டுமானம் மேற்கொள்ளும் போது அஸ்திவாரம் போடுவது தரைதளம் எழுப்புவது போன்ற ஒவ்வொரு கட்டங்களிலும் ஆய்வுகள் நடத்தி, கட்டுமானங்கள் விதிகளின்படியும், கட்டிட அனுமதியின்படியும் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல்கள் க்ண்டறியப்பட்டால் மேற்கொண்டு கட்டிட அனுமதி வழங்க கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்களை சீல் வைத்து பிறப்பிக்கும் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரும் மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தாலும் அதை சம்பந்தப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்ற உத்தரவுகளை பற்றி கவலைப்படாமல், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன், அவர்களின் ஐ ஏ எஸ் பதவிகளையும் பறிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது என்பது இரண்டாம் கட்டமாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், மீண்டும் விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை சேலம் மேட்டூரில் உள்ள சுடரொளி சமூக சேவை அறக்கட்டளைக்கும், சென்னை, திருவேற்காட்டில் உள்ள பசு மடத்துக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
[12/24, 18:00] Sekarreporter 1: பதிவுசெய்யப்பட்ட கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை எஸ்.பி. மற்றும் ஆணையர் தலைமையிலான குழுக்களை அமைக்க தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் தொடர்ந்த வழக்கில், தங்கள் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் மதுபான கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக லைசான்ஸ் வாங்க வேண்டுமென அரசு அதிகாரிகளும், காவல்துறையும் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம், படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் என பெயர் வைத்துவிட்டு, அந்த நோக்கத்திலிருந்து விலகி பிற செயல்பாடுகளுக்கு அந்த இடம் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு, மதுபானம் அருந்தும் இடத்திற்கு உரிமம் பெற கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட மறுத்துவிட்டார்.

மேலும், சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்த அமைப்புகள் அதன் பதிவு நோக்கிலிருந்து விலகி செயல்பட்டால், அதன் பதிவை ரத்து செய்வதற்கு பதிவுத்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட கிளப்கள், சங்கங்கள், ஸ்பாக்கள், மனமகிழ் மன்றங்கள், மசாஜ் சென்டர்கள் ஆகியவற்றில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு காவல்துறை எஸ்.பி. தலைமையில் மாவட்ட அளவிலும், காவல் ஆணையர்கள் தலைமையில் மாநகர அளவிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கும்படி தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அமைந்துள்ள பதிவுபெற்ற சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுபதை உறுதி செய்யவும், தவறினால் நடவடிக்கை எடுக்கும்படியும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் தகுந்த அறிவுறுத்தல்களை தமிழக டிஜிபி 4 வாரங்களில் பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...