Madras high court orders 27th august

[8/26, 16:39] Sekarreporter1: அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்தை அடுத்து வேலுமணி உள்பட 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையை புறக்கணிக்க அரசு முடிவெடுத்துள்ளது, விசாரணை நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

புகார்தாரர்கள் தெரிவித்த 14 குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக விசாரித்து தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை மீறி வழக்குப்பதிவு செய்ததற்கான காரணம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வேலுமணி மீது பதிவான இரு வழக்குகளை எதிர்த்து தனி நீதிபதி முன்பாகத்தான் வழக்கு தொடர்ந்து வாதிட வேண்டுமென்றும், இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு உகந்தல்ல என வாதிடப்பட்டது.

வேலுமணி தரப்பில் புகாரில் முகாந்திரம் இல்லை என்கிற ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை எனவும், தணிக்கை குழு அறிக்கையில் தனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படாத நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
[8/26, 16:55] Sekarreporter1: பயணி கீழே இறங்கும் முன்னரே, பேருந்தை நகர்த்தியதில் உயிரிழந்த மூதாட்டியின் வாரிகளுக்கு, 7.82 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றிய ஜெயம் என்ற மூதாட்டி, 2014ம் ஆண்டு டிசம்பர் 22ல், கே.கே.நகர் – அண்ணா சதுக்கம் சென்ற பேருந்தில் பயணித்தார்.

தியாகராயசாலை பஸ் நிறுத்தத்தில், ஜெயம் இறங்க முயன்ற போது, ஓட்டுனர் பஸ்சை எடுத்ததால் கீழே விழுந்த அவர், சம்பவ இடத்தில்
உயிரிழந்தார்.

ஜெயம் மரணத்துக்கு இழப்பீடு கோரி, அவரது மகன்கள் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த முதன்மை சிறப்பு நீதிபதி
திருமகள், பயணி இறங்குவதற்கு முன் ஓட்டுனர் அஜாக்கிரதை பஸ்சை இயக்கியதே, மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி, 7.82 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க சென்னை
மாநகர போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.
[8/26, 17:34] Sekarreporter1: காதல் திருமணம் செய்த மகன் மதம் மாற எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொல்ல வந்ததாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை செல்வபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்திரா நகர் – அமுல் நகர் சந்திப்பில் செல்வபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன், ஏட்டு சாலமனுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் சதாம் உசேன் என்பதும், மேலும் இந்திரா நகரை பகுதியை சேர்ந்த குமரேசனின் மகன் அருண்குமார் என்பவர், திருவாரூரை சேர்ந்த ராஜா முகமது – நூர்நிசா தம்பதியின் மகள் சஹானமியை திருமணம் செய்து கொண்டதாகவும், மகன் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ய பக்ருதின், இம்ரான், முகமது அலி ஜின்னா ஆகியோருடன் கோவை வந்ததாக சதாம் உசேன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் நால்வரையும் செல்வபுரம் காவல் நிலையத்தினர் கைது செய்ததுடன், தேசிய புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டுமென வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டி ஜாமீன் கோரி கோவை நீதிமன்றத்தில் மூன்று முறை சதாம் உசேன் தாக்கல் செய்த மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேச விரோதி போல சித்தரிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி, கோவை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ் சந்திரா அமர்வு, சந்தேகத்தின் அடிப்படையில் கைதான சதாம் உசேனின் ஒப்புதல் வாக்குமூலத்தை தவிர, குமரேசனை கொலை செய்ய வந்தார் என்பதற்கும், சமூகத்தில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வந்தார் என்பதற்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை என கூறி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதிகள் நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
[8/27, 12:11] Sekarreporter1: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ம் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல்கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு திங்கட்கிழமையன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
[8/27, 13:18] Sekarreporter1: கடந்த 1971ம் ஆண்டு தனிநபர்களுக்கு பட்டா வழங்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, 1971ம் ஆண்டு இந்த நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடராமல், பட்டா வழங்கியதை மறைமுகமாக செல்லாததாக்கும் வகையில், நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த அபராதத் தொகையை, 15 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
[8/27, 14:40] Sekarreporter1: மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக வாலிபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த சூரஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு கடந்த 2020ம் ஆண்டு குழந்தையும் பிறந்துள்ளது. திருமணத்தின் போது அந்த பெண் 18வயதை பூர்த்தி அடையவில்லை எனக் கூறி, பெண்ணின் தாயார் அளித்த புகார் காரணமாக சூரஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சூரஜ் தாக்கல் செய்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனது குழந்தையுடன் ஆஜரான அந்த பெண், திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக கூறினார்.

மேலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துகொண்டதாக பெண்ணின் தாயாரும் தெரிவித்தார்.

இதையடுத்து, சூரஜ் மீதான வழக்கை ரத்து. செய்து உத்தரவிட்ட நீதிபதி, இது இருவரின் தனிப்பட்ட விவகாரம் என்பதாலும், இருவரும் இளம் வயதுடையவர்களாக இருப்பதால் வழக்கை தொடர்ந்து நடத்துவது மன உளைச்சலையே ஏற்படுத்தும் என்பதாலும் சூரஜ் மீதான வழக்கை ரத்து செய்வதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[8/27, 14:59] Sekarreporter1: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக அனுபவித்ததுடன் மட்டுமல்லாமல், பிறருக்கு விற்கவிடாமல் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வாரியம் வெளியிட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்த ஜாய் என்பவருக்கு 5474 சதுர அடி நிலத்தை விற்றது. அந்த நிலம் முழுவதும் தன்னுடையது என கூறி லட்சுமி அம்மாள் என்பவர் சிவில் நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டில் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என சென்ற நிலையில், அந்த நிலம் வாரியத்திற்கு சொந்தமானது என 2016 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் லட்சுமி அம்மாளின் வாரிசுதரரான அல்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவில், தனக்கு தாயார் செட்டில்மெண்ட்டாக அளித்த நிலத்தை, வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு வசதி வாரியத்தின் ஆணையை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வீரசேகரன், தாயாரின் மனு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வாரிசுதாரர் என்ற பெயரில் புதிய மனு தாக்கல் செய்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சட்டவிரோதமாக அனுபவித்து வந்த வீட்டு வசதி வாரிய நிலத்தில் இருந்து தன்னை காலி செய்து விட கூடாது என்பதற்காக 20 வருடங்களாக லட்சுமி அம்மாளும், தற்போது அவரது வாரிசும் வழக்குகளை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டு, இது நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தவாக தெரிவித்து, அல்லியின் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அபராத தொகையை சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்திற்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
[8/27, 16:51] Sekarreporter1: விநியாகர் சதுர்த்தி விழா நடத்த ஆட்சேபமில்லை என ஜமாத் அமைப்புடன் இணைந்து உத்தரவாதம் அளிக்கும்பட்சத்தில் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க என கோவை பெரியகடை வீதி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட அனுமதி கோரி பெரியகடை வீதி போலீசாரிடம் உக்கடம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் விண்ணப்பித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அப்பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கினால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதை எதிர்த்து மகாலட்சுமி தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, விழாவில் பங்கேற்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஆட்சேபமில்லை என ஜமாத் அமைப்பினரின் உத்தரவாதத்துடன், அரசு விதிமுறைகளை பின்பற்றி விநியாகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என உறுதியளித்து விண்ணப்பிக்கும்பட்சத்தில் விழாவுக்கு பெரிய கடை வீதி போலீசார், பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்திற்குள் விநாயகர் சிலையை வைத்து கொண்டாடலாம் எனவும், எந்த ஊர்வலம் நடத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[8/27, 21:57] Sekarreporter1: இரு தரப்புக்கு இடையேயான ஆகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக இருக்க வேண்டிய கோவில்களில், அவை மேலோங்குவதால் கடவுள் பின்னுக்கு தள்ளப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை அடுத்த குல்லூரில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், கன்னிமார் மற்றும் குடும்ப தெய்வங்கள் கோவிலில் வழிபாடு நடத்த தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க ஈரோடு மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி எம். சேகர் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஒவ்வொரு முறை விழா நடத்த் ஏற்பாடுகள் செய்யப்படும்போது மனுதாரர் சேகர் தரப்பிற்கும், சாமிநாதன் மற்றும் ஜெகந்நாதன் தரப்பிற்கு தகராறு ஏற்படுபதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கடந்த ஜூன் 18ஆம் தேதி இரவு திருவிழா நடந்தபோதும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஈரோடு வட்டாட்சியர் மற்றும் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் கோவில் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, கோவில் வழிபாட்டில் இரு தரப்புக்கும் சுமூக உடன்பாடு ஏற்படுவதாக தெரியவில்லை என அதிருப்தி தெரிவித்ததுடன், வருவாய் மற்றும் காவல் துறை ஆகியவற்றின் ஆற்றலை வீணடிக்க விரும்பவில்லை என உத்தரவில் கூறியுள்ளார்.

கடவுள் நம்பிக்கையாளர்களால் அமைதியைத் தேடி வரும் இடமாக உள்ள கோவில்கள், வழிபாடு, தியாகம் மற்றும் பக்தி மூலம் மனிதர்களையும் கடவுள்களையும் இணைக்கும் ஒரு இடமாக வடிவமைக்கப்படுவதாக அமைப்பாக நம்பப்படுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

துரதிருஷ்டவசமாக பல நிகழ்வுகளில் இடையூறு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடமாக கோவில் அமைந்துவிடுவதால், அது அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிடுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இவைதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிரம்பி வழிவதாகவும், இரு தரப்பு இடையிலான மோதலை தீர்ப்பதிலேயே காவல் மற்றும் வருவாய்த் துறைகளின் அதிகாரிகளின் நேரம் செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையேயான ஆகம்பாவம் மற்றும் மோதலை குறைக்கும் இடமாக கோவில்கள் இருக்க வேண்டும் என்பதற்கு முரணாக, ஆகம்பாவம் மற்றும் மோதல் அதிகரித்து, கடவுள் பின்னுக்கு தள்ளப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அந்த பகுதியில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பும் வகையில் கோவில்கள் மூடப்படுகின்றன என்றும், ஆனால் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காக கோவிலை மூடுவது முரண்டானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையை சேர்த்த நீதிபதி, 10 நாட்களில் அந்த கோவிலுக்கான தக்காரை நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்படும் நபர் கோவிலை திறந்து, பக்தர்களை அனுமதிக்க வேண்டுமெனவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது ஈரோடு மாவட்ட எஸ்.பி. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...