Madras high court orders november 26 round up

[11/26, 11:56] Sekarreporter 1: நீர் பயன்படுத்துவோர் சங்கம், நீர் பகிர்மான குழு மற்றும் திட்டக்குழுவின் தேர்த்ல் 2022 ஏப்ரல் முதல்வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பொள்ளாச்சி தாலுகா மகாலிங்கபுரத்தை சேர்ந்த கே.பரமசிவம் தாக்கல் செய்துள்ள மனுவில்

தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை சட்டம் கடந்த 2001ல் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்கு சமமான முறையில் பாசன வசதி செய்து விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்தின் அடிப்படையில் விவசாய அமைப்புகள் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் தொடரப்பட்டன. நீரை பயன்படுத்தும் இந்த சங்கங்களுக்கு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த சங்கங்கள் நீர் பகிர்மான குழுவை தேர்வு செய்யும். இந்த குழு திட்ட குழுவின் தலைவரை தேர்வு செய்யும்.
நீரை பயன்படுத்துவோர் சங்கம், நீர் பகிர்மான குழு மற்றும் திட்ட குழுவின் தலைவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இந்நிலையில் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் முதல் தேர்தல் 2004ல் நடைபெற்றது. அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009ல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் 2009ல் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் தலைவர்களின் பதவிக்காலம் ஐந்தரை ஆண்டுகளாக அதிகரித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 2014 ஜூன் மாதம் முடிந்துவிட்டது. இதையடுத்து, டிசம்பர் 2014ல் இந்த தேர்தலை அரசு நடத்த வேண்டும்.
ஆனால், அரசு இந்த தேர்தலை நடத்த எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இது தொடர்பாக அரசுக்கு 2015 ஜனவரி 2ம் தேதி கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த சிறப்பு ஆணையரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் இதுவரை நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தேர்தலை அரசு நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு விவசாிகள் நீர்பாசன மேலாண்மை சட்டத்தின்படி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தண்ணீர் பகிர்மான குழு மற்றும் திட்டக் குழுவுக்கான தேர்தலை நடத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமமூர்த்தியின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் 1566 உள்ளன. 161 ர் பகிர்மான குழுக்களும் 9 திட்டக் குழுக்களும் உள்ளன. இவற்றிற்கான தேர்தலை நடத்த ரூ.2 கோடியே 90 லட்சத்தை ஒதுக்கி கடந்த 2019ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 25 மாவட்டங்களில் இந்த தேர்தலை நடத்த மாவட்ட கலெக்டர்கள் முழு அளவில் செயல்பட்டு வருகிறார்கள். தேர்தலுகான அறிவிப்பை ஜனவரி 2022க்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாள் தொடர்பான பட்டியல் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் வாரத்திற்குள் இந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்
[11/26, 12:16] Sekarreporter 1: சென்னை கொளத்தூரில் துவங்க உள்ள கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 18ம் தேதி நேர்முக தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து, அக்டோபர் 13ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், காலியிடங்களை அறிவிக்காமல், விண்ணப்பங்களை வரவேற்காமல், இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், கடந்த அக்டோபர் 18ம் தேதி நேர்முகத் தேர்வு முடிந்து, அக்டோபர் 22ம் தேதி பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், காலதாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[11/26, 15:12] Sekarreporter 1: விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா?????

சி.எம்.டி.ஏ., மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி தக்காளி விற்பனையை மேற்கொள்ள தாற்காலிகமாக அனுமதிக்கலாம். அதற்கு கட்டணத்தை வசூலிக்கலாம் – நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் வழக்கு

லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளது. மைதானத்தில் வாகனங்களை நிறுத்தியதால் மூடப்பட்டது – சி.எம்.டி.ஏ.
[11/26, 15:13] Sekarreporter 1: விலை உயர்வை கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ., மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் திங்கட்கிழமை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது,
மனுதாரர் தரப்பில்,
1200 சதுர அடி 2,400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளதாகவும்,
சிறிய கடைதாரர்கள் கிரவுண்டை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது

சி.எம்.டி.ஏ. தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, லாரிகள் நிறுத்தக்கூடிய இடத்தில் விற்பனையை மேற்கொள்ளக்கூடாது என்ற விதிகள் சரியானது தான் என்ற போதிலும், தற்போதுள்ள தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நான்கைந்து சிறு வியாபாரிகள் இணைந்து ஒரு லாரியை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் பட்சத்தில் அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து சரக்கை இறக்க மட்டும் அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்

தக்காளி விலை குறையும் வரை ஓரிரு வாரங்களுக்கு லாரிகளை நிறுத்தி கொள்ள அனுமதிப்பது குறித்து
சி.எம்.டி.ஏ., கோயம்பேடு மார்கெட் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு
வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 29) தள்ளிவைத்தார்.
[11/26, 15:41] Sekarreporter 1: ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு மாற்றாக, கொடைக்கானலில் தேசிய அளவிலான மையத்தை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்து கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.
பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, ஏற்காட்டிற்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டு, ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் – LAMP)கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல கொடைக்கானலில் மையம் அமைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து மற்றொரு வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குளும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி,
சேலம் மாவட்டத்தில் மையத்தை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர்,திடீரென கடந்த ஜூலை மாதம் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

முதலில் சேலத்தில் கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்டுவிட்டு, அதன் பின்னர் தான் கொடைக்கானலில் அமைக்கவுள்ள புதிய மையத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டதாகவும், கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக கூறும் நிலையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களே இல்லை எனவும் வாதிட்டார்

நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும் கூட சேலத்தில் நடைபெற்று கொண்டிருந்த கட்டுமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர்,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைப்பதில் ஆட்சேபனை இல்லை ஆனால்,அதற்காக மாநில அளவிலான பயிற்சி மையத்தை முடக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேசிய அளவிலான மையத்தை 20 ஏக்கர் பரப்பளவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதென கொள்கை முடிவெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து,தேசிய அளவிலான பயிற்சி நிறுவனம் அமைக்க அரசு கொள்கை முடிவு எடுத்ததாக கூறப்படும் ஆணவங்கள் மற்றும் அரசாணை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[11/26, 16:54] Sekarreporter 1: ராணுவத்துக்கு சொந்தமான சொத்துக்களை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதற்கு பதில், பாதுகாப்புத் துறைக்கு பயனளிக்கும் வகையில் அவற்றை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை ரத்தன் பஜார், ஃப்ரேசர் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜார் ஆகிய இடங்களில் ராணுவத்துக்கு சொந்தமான நிலங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன. இந்த நிலத்தில் முன்னாள் ராணுவ மேஜர் உள்ளிட்ட மூவருக்கு பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வழங்கியது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.

இந்த நிலங்களுக்கான வாடகை பாக்கி 18 கோடியே 56 லட்சம் ரூபாய் செலுத்தாததால், நிலத்தை காலி செய்யும்படி பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ராணுவ சொத்து நிர்வாக அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்தியன் ஆயில் கார்ப்ப்ரேஷன் நிறுவனத்துக்கும், பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போது, இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், உரிய காலத்தில் வாடகை பாக்கியை செலுத்தாத இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் எந்த நிவாரணம் கோர உரிமையில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ராணுவத்துக்கு சொந்தமான சொத்துக்களை வணிக பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு, வாடகையை வசூலிக்க இயலாமல் உள்ள பாதுகாப்பு துறை, அந்த சொத்துக்களை ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

அதேபோல குறிப்பிட்ட அந்த பங்க்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதை உடனடியாக நிறுத்தும்படியும், இரண்டு மாதங்களில் அந்த நிலங்களை காலி செய்து ராணுவத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, வாடகை பாக்கியை ராணுவ அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி 12 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அத்தொகையை வசூலிக்க ராணுவம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[11/26, 17:58] Sekarreporter 1: இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கீரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள
கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்,தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[11/26, 18:00] Sekarreporter 1: கொரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால்
மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் அதன் செயலாளர் வாசுகி தாக்கல் செய்துள்ள மனுவில்
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் கிராமப்புறங்களை சேர்ந்த பல ஏழை மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. வசதி படைத்தவர்களின் குழந்தைகள் லேப்டாப், செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கற்று வந்தனர். நடுத்தர மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியும் என்ற போதிலும் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் வேறு இடங்களுக்கு நகர்ந்ததால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களின் குழந்தைகளும் கிடைத்த வேலைகளுக்கு செல்லத் தொடங்கினர்.

தொடர்ந்து பள்ளிக்கு சென்றால் இடை நிற்றல் என்ற பேச்சு எழாது. ஆனால், வசிப்பிட மாற்றம், வாழ்வாதாரம் ஆகிய காரணங்களால் ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி இடைநிற்றல் அதிகரித்துவிட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அந்த குழந்தைகளால் மீண்டும் பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த கல்வி ஆண்டை ‘பூஜ்ய’ கல்வி ஆண்டு என்று அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்காக அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு தெருக்களிலும் ஆன்லைன் வகுப்புகளை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்து அந்த மாணவர்களின் படிப்பை கண்காணிக்க தகுதியான நபர்களை நியமிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றம் அப்போதைக்கப்போது பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களின் படிப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்துள்ளது என்று தெரிவித்தனர்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தற்போது அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்கிறார்கள். எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை. வழக்க முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
[11/26, 18:24] Sekarreporter 1: கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் இருப்பது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை 1960ல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை 17,200 ரூபாயாக உயர்த்தி 2016ஆம் ஆண்டு கோவில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 1960ல் வழங்கப்பட்ட குத்தகை 5 ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் தான் என்பதால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மூன்று மாதங்களில் மனுதாரரை கோவில் நிலத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு மட்டுமல்லாமல், அறநிலைய தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும், கோவில் சொத்துக்களின் வாடகை முறையாக வசூலிப்பதில்லை என்றும், அதிகாரிகளும், அறங்காவலர்களும் கைகோர்த்து செயல்பட்டு, சட்டவிரோத ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, கோவில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் பல உன்னத ஆத்மாக்கள், தங்கள் சம்பாத்தியத்தை மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக எழுதிவைத்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்தை கவுரவப்படுத்தாமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என்றும், அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ளார்.

You may also like...