Madras high court orders october 27

[10/27, 11:33] Sekarreporter 1: அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் நோய்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது எனவும், மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசு மருத்துமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தார்.
[10/27, 16:55] Sekarreporter 1: மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர்கள் ஒளிவுமறைவற்ற வகையில் ஒதுக்கப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, டெண்டர் முறைகேடு தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அளிக்கப்பட்ட புகார்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அந்த வழக்குகள் விசாரணையின் போது, புகார் தொடர்பாக எஸ்.பி. பொன்னி தலைமையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் வாதிட்டார்.

அதன்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. பொன்னி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததாகவும், அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியதாகவும், அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்குப்பதிவு செய்ய கோரி தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்றோ, பணிகளை செயல்படுத்தியதில் முறைகேடு என்றோ புகார் கூறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சர் என்ற முறையில் தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர, எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சி ஏ ஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்குபதிய கோரி தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்வது குறித்தும் இந்த நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல என்றும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை எனவும், வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணை மேற்கொள்ளவும் தான் அரசு அனுமதி வேண்டும் எனவும், முதலில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த மட்டுமே அரசின் அனுமதி பெறப்பட்டதாகவும், அதற்கு பிந்தைய ஆரம்பகட்ட விசார்ணைக்கும், வழக்குப்பதியவும் அரசின் அனுமதி பெறவில்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் வேலும்ணி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போதுமான கால அவகாசம் இருந்த போதும், அவசரமாக ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப்பதிவு செய்ய முடியும் எனவும் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியும் முன், சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும், ஆனால் அரசியல் காரணமாக சொத்துக்கள் விவரங்கள் குறித்து வேலுமணியிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை எனவும் முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் ஏதும் இல்லை எனவும் வாதிட்டார்.

உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வேலுமணிக்கு எதிராக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பு பதில் வாதத்துக்காக மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு த்ள்ளிவைத்தனர்.
[10/27, 17:50] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ள வீர் பிரதாப் சிங்கை நவம்பர் 15ம் தேதி அஜர்படுத்தும்படி மாவட்ட எஸ்.பி.-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேட்டூர் சார் ஆட்சியராக இருந்த வீர் பிரதாப் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டிருந்தார்.

விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல், தனது உதவியாளரை அனுப்பி வைத்த வீர் பிரதாப் சிங் , தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய விசாரணைக்காக சேலம் மாவட்ட ஆட்சியருடன் சென்றிருந்ததால், இந்த வழக்கில் ஆஜராக இயலவில்லை எனவும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்திவிட்டதாகவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு டெல்லி சென்றுள்ளதால், மனுவை ஏற்க முடியாது என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வீர் பிரதாப் சிங்கிற்கு. எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்த நீதிபதி, நவம்பர் 15ஆம் தேதி அவரை ஆஜர்படுத்த மாவட்ட எஸ்.பி.-க்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[10/27, 17:51] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ள வீர் பிரதாப் சிங்கை அஜர்படுத்தும்படி மாவட்ட எஸ்.பி.-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு……

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாமல் மாவட்ட ஆட்சியருடன் டெல்லி சென்றுவிட்டு, ஆஜராக விலக்கு கோருவதை ஏற்க முடியாது – நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தனது உதவியாளரை அனுப்பி வைத்த வீர் பிரதாப் சிங் , நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு தள்ளுபடி

வழக்கின் விசாரணை நவம்பர் 15 தள்ளிவைப்பு
[10/27, 19:10] Sekarreporter 1: கரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அரசு மருத்துவரான ஏ.கே.விவேகானந்தன் கடந்த 2020 நவ.22 அன்று பணியில் இருந்த போது கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். இந்நிலையில் அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்த வி.ஆர்.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நந்தகுமார், கரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவரான விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரியான அவருடைய மனைவி 2 குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறார் என்பதால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு தரப்பில் அவகாசம் கோரப்படுகிறது, என ஆட்சேபம் தெரிவி்த்தார்.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, விசாரணையை வரும் நவ.18-க்கு தள்ளி வைத்துள்ளார்.

You may also like...