madras high court today Feb 9th orders

[09/02, 14:07] sekarreporter1: பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டத்தை தவறாக பயன்படுத்திய தாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து வந்த 39 வயது பெண், கணவரை பிரிந்து விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, கணவரை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்தில் தனது 14 வயது மகளை கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 2018அம ஆண்டு காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் கணவர் தககல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை நேரில் அழைத்து விசாரித்தபோது, தந்தையால் எந்தவித பாலியல் தொல்லைக்கும் ஆளாகவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்பின்னர் முன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், கணவருக்கு எதிராக பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய மனைவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

அதன்படி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம், ராஜலட்சுமி முன்பாக நடந்தபோது, காவல்துறை தரப்பி்ல் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பாலியல் கொடுமை மற்றும் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் கொண்டு போக்சோ சட்டம் வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்ட்த்தையே ஒரு தாய் தவறாகப் பயன்படுத்தி, கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கைகளையும் போலியாக தயாரித்து மோசடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, பெண் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
[09/02, 14:53] sekarreporter1: ஆம்னி பேருந்துகள் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கோரிக்கை குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும், புதிதாக துவங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்களும், ஆம்னி பேருந்து சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள், நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசுத்தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும் என்றும், ஜி எஸ் டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கரில் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[09/02, 16:15] sekarreporter1: எந்த ஒப்பந்தமும் இல்லாமல் தங்கள் கட்டிடத்தில் தொடர்ந்து இயங்கி வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து கட்டிடத்தை ஒப்படைக்கக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளருக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்திரி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் தங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகைக்கு வழங்கியதாகக் கூறியுள்ளனர்.

மாதம் 10 லட்சத்து 14 ஆயிரத்து 300 ரூபாய் என வாடகை நிர்ணயித்து, 2022ம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மாற்றி அமைத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 438 ரூபாய் வாடகையாக நிர்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பர் வரைக்கும் 82 லட்சத்து 16 ஆயிரத்து 824 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிர்ணயித்ததால் மாதத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்ததாகவும், இந்த தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்தப்படுத்தியதால் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டிடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக, 97 லட்சத்து 10 ஆயிரத்து 792 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரைக்கும் கட்டிடத்தை பயன்படுத்தியதற்காக அந்த தொகையை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டிடத்தை பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்பதால், அதனை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மார்ச் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், தாம்பரம் காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
[09/02, 16:34] sekarreporter1: தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், மனுதாரர் கேட்கும் இடங்களில் அனுமதிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேறு எந்த மாதிரியான போராட்டத்திற்கு எந்த இடத்தில் அனுமதிக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டே அனுமதி மறுத்ததாகவும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிப்ரவரி 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே கலந்துகொள்ள இருப்பதாக கூறி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் கேட்பதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், வழக்கமான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிப்ரவரி 28 முதல் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[09/02, 17:21] sekarreporter1: வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டித்து ,சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன்,  அவரது மனைவி மர்லினா  ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில்  ஜனவரி 25ம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரின் நீதிமன்ற காவல் நிறைவடைவதை அடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அப்போது, இருவரின் நீதிமன்ற காவலையும் பிப்ரவரி 23ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like...