No bail இல்லை நீதிபதி அல்லி

சென்னை, ஆக. 22: வங்கியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து முறையே ரூ.2 கோடியே 93 லட்சம், ரூ.2 கோடியே 95 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பெண்களின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாடியை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர் எட்டிகா அரோமா, கார்டமான் கார்டன், கிரீன் லீஃப் என்ற தனது நிறுவனங்கள் பெயரில் முறையே ரூ.98 லட்சம், 99 லட்சம், 96 லட்சம் என ரூ.2 கோடியை 93 லட்சத்தை பேங்க் ஆப் பரோடா வங்கியிலுந்து வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு தனது கணவர் பெயரில் ஆதனூரில் உள்ள நிலத்தை ஈடாக வங்கியிடம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடன் பணத்தை திரும்ப செலுத்ததால் அவரது சொத்துக்களை ஆய்வு செய்தபோது சிவரஞ்சனியின் கணவருக்கு அந்த சொத்துக்கள் சொந்தமில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, சிவரஞ்சனியை கடந்த 1ம் தேதி கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு ெசய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிவரஞ்சனி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, மனுதாரர் வங்கியில் ஈடாக வைத்துள்ள சொத்துக்கள் அவரின் கணவருக்கு சொந்தமானதல்ல. இந்த வழக்கில் 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் மிகப்பெரிய தொகை சம்மந்தப்பட்டுள்ளதால் தற்போது ஜாமீன் வழங்க முடியாது. எனவே, சிவரஞ்சனியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதேபோல், 3 சொத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.2 கோடியை 95 லட்சம் வங்கி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொரட்டூரை சேர்ந்த பே லீஃப், கோல்டன் லீஃப், அக்‌ஷயா உட்லேண்ட் நிறுவனங்களின் அதிபர் சங்கரேஷ்வரி என்பவரின் ஜாமீன் மனுவையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

You may also like...