Sanathanam case senior adv viduthalai arguments

சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத அம்சங்கள் குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு உரிமை உள்ளதாக, திமுக எம்பி ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சனாதனம் குறித்து பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ராசா ஆகியோருக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த கோ- வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக எம்.பி. ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

அப்போது அவர், வரையறுக்கப்படாத காரணங்களை கூறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோ-வாரண்டோ உத்தரவு பிறப்பிக்க கோருவது அரசியல் சாசனத்தை திருத்தி எழுதவும், அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கு எதிரானதாகவும் அமையும். ஆகவே, இந்த மனு ஏற்கத்தக்கதல்ல என்றார்.

இத்தகைய கோவாரண்டோ உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான அதிகார பகிர்வு, கோட்பாடு அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தகுதி நீக்கம் செய்ய புதிய நிபந்தனையை சேர்க்கவும், இந்த கோட்பாடு அனுமதிக்கவில்லை என வாதிட்டார்.

மதத்தை பின்பற்றுவதற்கான அரசியல் சாசன உரிமையைவிட உயர்ந்ததாக பேச்சு மற்றும் கருத்துரிமை அமைந்துள்ளது. அருவெறுக்க தக்க மத நடைமுறைகளை விமர்சனம் செய்யவும், இந்த உரிமை வகை செய்கிறது.

சனாதன தர்மத்தில் உள்ள சமூக நீதிக்கு எதிரான விரும்பத்தகாத அம்சங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு உரிமை உள்ளது எனவும் ராசா தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை நவம்பர் 24ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...