smsj bench gondos case interim bail சரமாரி கேள்விக்கு state pp Ginna பதில்

சென்னை, ஆக.20-

இடைக்கால ஜாமீன்

குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்கும்போது, குண்டர் தடுப்புச் சட்டத்தை போலீசார் தேவையில்லாமல் அதிக அளவில் பயன்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதுபோன்ற வழக்குகளில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவை நேற்று பிற்பகலில் 2.15 மணிக்கு ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தவிட்டனர். அதன்படி அவர் நேரில் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
ஒருவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தில் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் எளிதில் போலீசார் அடைத்து விடுகின்றனர். இதில், தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அந்த நபர்கள் சார்பில் தொடரப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் பல்வேறு சம்பிரதாயங்களுக்கு பின்னர் இறுதி விசாரணைக்கு வந்து. 6 மாதம் கழித்து இந்த ஐகோர்ட்டு ரத்து செய்கிறது.
குண்டர் சட்டத்தில் 6 மாதம் சிறையில் இருந்த நபரின் அடிப்படை உரிமை மட்டுமல்ல, தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை என்று அனைத்து உரிமைகளும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களை ஐகோர்ட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே, 6 மாதம் கழித்து ஒருநபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படும்போது, 6 மாதம் சிறையில் இருந்ததற்காக அந்த நபருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு போலீசார் இழப்பீடு வழங்குவார்களா? இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா?
தொடர் குற்றத்தில் ஈடுபடுபவர்களைத்தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கிறோம் என்று போலீஸ் தரப்பில் பதில் அளித்தாலும், தமிழ்நாட்டில் மணல் கொள்ளை தொடர்குற்றமாக நடக்கிறது. போலீஸ்காரர்களும் தொடர்ந்து லஞ்சம் வாங்குகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
போலீசாரால் சட்ட ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. அதனால், குண்டர் சட்டத்தை எளிதாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் குற்றவாளிகள் என்று முத்திரை குத்துகின்றனர்.

மிகப்பெரிய கிரிமினல்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம். சாதாரணமானவர்களை கூட இந்த சட்டத்தில் சிறையில் அடைப்பது ஏற்கமுடியாது. கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட திடீர் கோபத்தில் கொலை செய்ய ஒருவரை குண்டச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளீர்கள். அவர் என்ன தொடர் குற்றவாளியா?
ஆஸ்பத்திரி, கோர்ட்டு, கலெக்டர் அலுவலகங்களுக்கு அச்சம் இல்லாமல் செல்லும் பொதுமக்கள், போலீஸ் நிலையத்துக்கு மட்டும் வர ஏன் பயன்படுகின்றனர்? இத்தனைக்கும் காவலர்கள் உங்கள் நண்பர்கள் என்று கூறுகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு கார் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் கார்களில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.
அதனால், குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால் என்ன?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘‘இடைக்கால ஜாமீன் வழங்க ஐகோர்ட்டுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், வழக்கை பொறுத்து வழங்கினால், பாதிப்பு ஏற்படாது. குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டி.ஜி.பி.க்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன். அதேபோல, போக்குவரத்து போலீஸ்காரர் சாலையில் நின்றால்தான், வாகனத்தில் செல்பவர்கள் போக்குவரத்து சிக்னல்களை மதிக்கின்ற நிலையில் சமுதாயம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் போலீசாரின் பங்களிப்பும் முக்கியமானது. அதானால், போலீசாரை அனைவரையும் குற்றம் சொல்ல முடியாது. எல்லாத்துறைகளிலும் லஞ்சம் உள்ளது’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘நீதித்துறை குறிப்பிட்டு நீங்கள் சொல்லலாம். ஆனால், நீதித்துறையில் ஊழல்வாதிகள் மீது ஐகோர்ட்டு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டுமொத்த போலீசாரையும் நாங்கள் குற்றம் சாட்டவில்லை. எத்தனை போலீஸ் அதிகாரிகள், சட்டப்படி டி.ஜி.பி.யிடம் ஆண்டுதோறும் சொத்துக்கணக்கை காட்டுகின்றனர்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தும்படி நீதிபதிகள் தலைமை குற்றவியல் வக்கீலுக்கு உத்தரவிட்டனர்.
………..

You may also like...