State pp jinna filed report in mhc regarding srimathi student case cinnasalem

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த மூடி முத்திரையிட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் என்வும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி உடற்கூறாய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டதாக கூறி, அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். பின்னர் டி.ஐ.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யுடியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மற்றொரு குற்ற வழக்கில் பள்ளி தாளாளர் தொடர்புடையதால் அதுகுறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசால் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணாக்கர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளதாகவும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த நிலைமை சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது என்றும், விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாமென அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவற்றிற்கு அறிவுறுத்தியதுடன், அவை தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இதுதொடர்ந்து முன்னிலைபடுத்தப்படுவதால், அவற்றை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும் மோசமாவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

You may also like...