Tds case jidge krishnan ramasamyn. பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது income tax senior standing counsel dr ramasamy

பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பணப்பலன்களை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமானால் வருமான வரிச் சட்டத்தின் 194ஏ மற்றும் 194என் ஆகிய பிரிவுகளின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ஈரோடு மாவட்டம் சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, மனுதாரர் சங்கங்கள் தரப்பில் அரசின் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பலன்களை உறுப்பினர்களுக்கு வழங்கும் பணியை சங்கங்கள் மேற்கொள்கின்றன என்றும், அதனால் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக எடுக்கப்படும் தொகைக்கு வருமான வரி செலுத்த முடியாது என்றும், வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வருமான வரித் துறை தரப்பு, மனுதாரர் சங்கங்களுக்கு எந்த விலக்கு வழங்கப்படவில்லை என்றும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்குத் தான் வரி விலக்கு பொருந்தும் என்றும் வாதிடபட்டது. மேலும், வங்கிகளில் இருந்து எடுக்கும் பணத்தின் உச்ச வரம்பை அப்போதைய முதல்வர் மற்றும் தலைமை செயலாளரின் கோரிக்கையை ஏற்று ஒரு கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக அதிகரித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதலீடுகளை பெற்று வட்டி வழங்கக்கூடிய மனுதாரர் சங்கங்கள், ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கி நடவடிக்கை தான் என்பதால் வரி பிடித்தம் செய்யலாம் எனவும், தற்போதைய நிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, அதில் அதிகமாக பிடித்தம் செய்திருந்தால் திரும்ப வழங்கக் கோரலாம் என கூறிய நீதிபதி, இது முன்கூட்டியே தொடரபட்ட வழக்கு என தெரிவித்து வழக்குகளை முடித்துவைத்தார்.

மேலும், வருமான வரிச் சட்டம் 194என் பிரிவு, ரொக்கமில்லா பண பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் வகையிலும், சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும் கொண்டு வரபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, ரொக்கமில்லா பணபரிவர்த்தனையில் பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், தொலைந்து போகவோ, திருடப்படவோ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரொக்கமாக கையாண்ட பல சங்கங்கள், அரசு அதிகாரிகளுடன் கைகோர்த்து போலி கணக்குகளை உருவாக்கி பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்குகளையும் நீதிமன்றம் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அரசின் கடன் தள்ளுபடி அல்லது வட்டி தள்ளுபடி போன்ற சலுகைகள் போலி நபர்களுக்கும் சென்றடைகின்றன என்றும், வருமான வரி சட்டத்தின் பிரிவு 194என் என்பது பண விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்குமான வழிகளில் ஒன்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிக் கணக்கைத் தொடங்குவது மிகவும் எளிதான செயலாக இருப்பதால், பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம் போன்ற நிவாரணங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும்போது, பயனாளிகள் தாங்கள் சாந்துள்ள சங்கங்களை அணுக வேண்டிய அவசியமில்லாமல், மதிப்புமிக்க நேரம் மிச்சமாவதுடன், சங்கத்தின் பணிச்சுமையும் குறையும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த ஊரில் உள்ள நியாய விலை கடையில் தனது உறவினர் சர்க்கரையை மட்டுமே வாங்கிவரும் நிலையில், கோதுமை, எண்ணெய் போன்றவற்றை வாங்கியது போல் குறுஞ்செய்தி மூலம் ஒரு தகவல் வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,
இதுபோன்ற மோசடிகளை தடுக்க அரசு திட்டமிட்டாலும், ஏமாற்றுவோர் புதுமையான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு வழங்கும் உதவி நேரடியாக பயனாளருக்கு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது என்றும், இல்லாவிட்டால் ஏழை விவசாயிகள் மற்றும் நெசவாளர்களிடம் பணத்தை மோசடி செய்து விடுவார்கள் என்றும் நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணம் போன்ற பலன்கள், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் வழங்கப்படுவதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசால் ரொக்கமாக வழங்கப்படும்போது, தவறாக கையாளப்பட வழி வகுக்குப்பதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்றும், ஊழலையும், பணத்தை தவறாகக் கையாள்வதையும் முற்றிலுமாக ஒழிக்க வழி உள்ளபோது, அவற்றை அரசும், சம்பந்தப்பட்ட ​​சங்கங்களும் பின்பற்றி, வங்கிக் கணக்குகள் மூலம் அனைத்து விதமான நிவாரணங்களையும் விநியோகிக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ள நீதிபதி, அவ்வாறு செலுத்தும்போது TDS பிரச்சினையும் எழாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிந்துரைகளை கூட்டுறவு சங்கங்களும், அரசும் பின்பற்றினால், எதிர்காலத்தில் எந்த பணப் பரிவர்த்தனையை கையாள வேண்டிய அவசியம் இல்லாமல் போவதுடன், போலி பெயர்களில் நிவாரணங்கள் பெறப்படுவதையும் தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரிச் சட்டத்தை திருத்துவதன் மூலம் கூட்டுறவு சங்கங்களின் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான சுற்றறிக்கைகளை வெளியிடுவது குறித்து வருமான வரித் துறை பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...