அதிரடி உத்தரவு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக் கூடாது நீதிபதி ஆர்.என். மஞ்சுளா

கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சேத்துமடை அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்த மதன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு பணி காலத்தின்போது மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க கோரி அவரது மனைவி விண்ணிப்பித்திருந்தார்.

இதனிடையே அவர் விபத்தில் சிக்கி நடமாட முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, கணவரின் வேலையை தனது மகள் சனிதா-விற்கு வழங்கக் கோரி கோவை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தார். அவரின் கோரிக்கையை மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்ததை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும் உறுதி செய்தார்.

இதனை எதிர்த்து சனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய அவரது மனுவை பரிசீலிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், மனுதாரரின் தாய் விபத்தில் சிக்கி அவரால் பணி செய்ய முடியாத நிலையில், அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்ததில் தவறு இல்லை என தெரிவித்துள்ளார்.

பணியில் இருக்கும் நபர் திடீரென உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பம் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் கருணை அடிப்படையில் வேலை வழங்க திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நீதிபதி மஞ்சுளா, இந்த உன்னத திட்டத்தை குறுகிய காரணங்களை கூறி நீர்த்துப்போக செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் கால சூழல் மாறியதற்கு ஏற்ப அரசு முடிவெடுத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள நீதிபதி தகுதியின் அடிப்படையில் மனுதாரருக்கு ஆறு வாரங்களில் பணி வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

You may also like...