நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர்

திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற கோரிய மனுவை பரிசீலிக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைத்துள்ளதாக கூறி, அவற்றை அகற்றக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான கே.கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அதன்படி நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி மாநகரட்சி ஆணையர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கோபிநாத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

You may also like...