நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி order elephant case

மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் உள்ள வயதான அபயாம்பிகை யானைக்கு ஓய்வு தரக்கோரி தொடரப்பட்ட பொது நல மனுவுக்கு அறநிலையத்துறை பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவாவை சேர்ந்த அஸ்வானி அலோக் குப்தா என்ற விலங்குகள் நல ஆர்வலர் தாக்கல் செய்துள்ள மனுவில், \” மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் அபயாம்பிகை என்ற பெண் யானை உள்ளது. இந்த யானைக்கு தற்போது 58 அல்லது 59 ஆக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள மிக வயதான இந்த யானை வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல்நல கோளாறுகளுடன் உள்ளது. இந்த யானைக்கு உரிய பராமரிப்பு வழங்க கோரி கடந்த 2018ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் டாக்டர் அஜைய் தேசாய் தலைமையில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வை பரிசீலித்த உயர் நீதிமன்றம் அபயாம்பிகை யானையை கோயிலின் ஒரு பகுதியில் அது அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்தில் சுதந்திரமாக இருக்கவும், யானையை பொதுமக்கள் தொடாமல் இருக்க தடுப்புகளை அமைக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 2021 டிசம்பரில் நான் நேரடியாக அந்த கோவிலுக்கு சென்று ஆபயாம்பிகையை பார்த்தபோது அந்த யானை மிக மோசமான நிலையில் இருந்தது தெரியவந்தது. ஜன்னல்கள் இல்லாத பகுதியில் அடைக்கப்பட்டிருந்த யானை மிகவும் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு வனத்துறைக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அபயாம்பிகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், யானைக்கு உரிய வசதிகள் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. யானை பாகன்களுக்கு போதிய சம்பளம் தரப்படவில்லை. அந்த யானையை கோவில் நிர்வாகம் சரியாக கவனிக்கவில்லை.
இதையடுத்து, 2023 ஜூலையில் மீண்டும் அபயாம்பிகையை நேரில் சென்று பார்த்தபோது யானை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டது. அதை ஒரு சிறிய கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

வயதான ஒரு யானையை தனிமைப்படுத்தி வைத்திருப்பது தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்பு விதிகளுக்கு எதிரானது. எனவே, அபயாம்பிகை யானைக்கு ஓய்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்\” என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவுள்ளாதாக தெரிவித்தார். இதையடுத்து, அறநிலையத்துறை பதில் தருமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

You may also like...