அமைச்சர் என்கிற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யுள்ளது

அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரியான துணை இயக்குனர் கார்த்திக் தாசரி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல என்பதையும், அவர் கைது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதையும் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டிஜிட்டல் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறுவது தவறு என்றும், செந்தில்பாலாஜி ஒத்துழைக்கவே இல்லை என்றும், தனக்கு தெரிந்த எல்லாத்தையும் சொல்லிவிட்டதாக தெரிவித்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவரிடம் விசாரணை முடிவடைந்துவிட்டது என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறிவிட்டதாக கருத முடியாது என்றும், திரும்பத்திரும்ப ஒரே காரணத்தை கூறி ஜாமீன் கேட்டு மீண்டும் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கைதாகி 182 நாட்களாக சிறையில் இருப்பதாக செந்தில்பாலாஜி கூறுவது தவறு என்றும், இலாகா இல்லாத அமைச்சராக ஜூன் 14 முதல் ஜுலை 17 வரை மருத்துவமனையில் இருந்ததாகவும், ஜூலை 17 முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை சிறை மருத்துவமனையிலும் அனைத்து வசதிகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை மருத்துவமனையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் என்கிற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் செந்தில்பாலாஜி, செல்வாக்கான நபர் என்பதால், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என கூறியுள்ள அமலாக்கத் துறை, ஜாமீன் கோரிய செந்தில்பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.

You may also like...