இயந்திரத்தனமாக செயல்படாதீங்க judge tickaraman advise

தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் இயந்திரத்தனமாக ஜாமீன் வழங்கியதை சுட்டிக்காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் தன்மையை உணர்ந்து கடுமையாக செயல்பட வேண்டும் என நீதித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கிண்டி அருகே மடுவண்கரை பகுதியில் தங்கள் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக தனியார் தொலைத்தொடர்பு அமைப்பு செயல்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்பு அதிகாரிகளிடம் ஏர்டெல் நிறுவனம் புகார் அளித்தது. ஜூலை மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் காவல்துறையினர், தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் குழுவினருடன் அதிரடி சோதனை செய்ததில், அங்கு சிம் பாக்ஸ்கள் அமைத்து, வெளிநாட்டு அழைப்புகளை, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.

சிம் பெட்டிகள், சிம் அடிப்படையிலான வயர்லெஸ் இணைய ரூட்டர், சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது நசீர், ரமீஸ் பைசான், அப்துல் மாலிக், சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சிலருக்கு எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ரமீஸ் பைசான் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி RMT.டீக்காராமன் விசாரித்தார்.

பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல், வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியதால், அவற்றை முறையாக கண்காணிக்க இயலாய் என்பதால், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத தொலைபேசி நிலையம், சமூக விரோத செயல்களுக்காக பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும், தீவிரவாத அமைப்புகள் தங்களது அடையாளங்களை மறைத்து சட்டவிரோத தொலைபேசி நிலையங்களை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ள நீதிபதி, மனுதாரரின் ரமீஸ் பைசானின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் சிலர் ஜாமீன் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீதித்துறை அதிகாரிகள் ஜாமீன் வழங்கும்போது இயந்திரத்தனமாக செயல்படுவதை விட, குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் தன்மையை புரிந்துகொண்டு, கடுமையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

You may also like...