உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரை உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவல் நிலையத்தில் மரணமடைய காரணமாக இருந்ததாக மதுரையில் உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரை உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் முனியாண்டியின் மகன் சுரேஷ் என்பவர், 2011 டிசம்பர் 2ம் தேதி இரு சக்கர வாகனத்தை திருடியபோது பொதுமக்கள் துரத்தி அடித்ததில் உயிரிழந்து விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

திருட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷின் நண்பர் டேவிட், பொதுமக்கள் பிடித்து கரிமேடு காவல்துறையில் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் தாக்கியதில்தான் சுரேஷ் மரணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சுரேஷ் மரணத்திற்கு காரணமான உதவி ஆணையர் வெள்ளைதுரை, திலகர் திடல் ஆய்வாளர் விவேகானந்தன், கரிமேடு உதவி ஆய்வாளர் சீனி ஆகியோர் மீது நடவடிக்கை கோரி, சுரேஷின் தந்தை முனியாண்டி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதை விசாரித்த ஆணையம், காவல் துறை தாக்கியதால் மரணம் ஏற்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, முனியாண்டி குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அந்த தொகையை அப்போது உதவி ஆணையராக இருந்த வெள்ளதுரை, ஆய்வாளராக இருந்த விவேகானந்தன் ஆகியோரிடமிருந்து தலா 2 லட்சத்து 50 ஆயிரத்தை வசூலிக்க வேண்டுமெனவும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு, மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உதவி ஆணையர் வெள்ளதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வு, பிரேத பரிசோதனை அறிக்கையின் படி உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே சுரேஷ் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த காயம் பொதுமக்கள் தாக்கியதாலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சுரேஷின் மரணத்திற்கு வெள்ளதுரை தான் காரணம் என எந்த புகாரும் இல்லை எனக் கூறி, மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

You may also like...