எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் நலனில் அக்கறை கொண்டு அரசு எடுத்த நடவடிக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி

விருதுநகர் சாத்தூரில் எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் நலனில் அக்கறை கொண்டு அரசு எடுத்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்துவைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சிவப்பணுக்கள் குறைபாடு உள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து ரத்தத்தை பெற்று செலுத்தினர்.

அந்த ரத்தம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் என கண்டறியப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் S.வைத்தியநாதன், P.T.ஆஷா அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குழந்தையின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 10 லட்ச ரூபாயும், இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ஏழரை லட்ச ரூபாய் வீதம் 15 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மாதம் 7 ஆயிரத்து 500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டதுடன், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி அவருக்கு இரு சக்கர வாகனமும், வீடும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனில் அரசு அக்கறை செலுத்தி உள்ளது அரசு நடவடிக்கைகளில் இருந்து தெரியவருவதாக குறிப்பிட்டு, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக சாத்தூர் நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கை சட்டப்படி தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...