குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2021 ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், பப்ஜி மதனின் ஜாமின் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மதன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்துக்காக ஜாமின் வழங்க முடியாது என வாதிட்டார்.

சுமார் 7 லட்சத்துக்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் கொண்ட யூ-டியூப் சேனல் வைத்துள்ள பப்ஜி மதன், பப்ஜி விளையாடும் போது ஆபாசமாக பேசியதால் 18% சிறுவர்கள் மற்றும் 64% இளைஞர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தற்போது பப்ஜி மதனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமின் வழங்கினால்,
அவர் மீண்டும் இதே குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளதாகவும் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பப்ஜி மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...