கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்

சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர், அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவருமான ப.சஞ்சய்காந்தி தகவல்

தஞ்சாவூர்
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்காந அங்கீகாரம் கேட்டு விண்ணப்பத்தினை, சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவருமான ப.சஞ்சய்காந்தி தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து ப.சஞ்சய்காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற “கும்பகோணம் வெற்றிலை”க்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் வெற்றிலை:
“கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம்,
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”
என மகாகவி பரதியார் தன்னுடைய பாடலில் கூறியுள்ளபடி, காவிரி ஆற்று படுக்கையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது வெற்றிலை. அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை என பெயர் பெற்று விளங்குகிறது.
காவிரி படுகையில் முக்கியமாக திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பூம்புகாருக்கு ஆறு மைல் தொலைவில் புஞ்சை என்ற ஊர் உள்ளது. இவ்வூர் சிவன் கோயில் கல்வெட்டில் விக்கிரமசோழன் காலத்தில் மும்முடிச்சோழனின் பேரம்பழத்தில் தலைசெங்காட்டு மூலப்புருஷ கட்டிட, இளவரசியின் வேண்டுகோளுக்கின்படி வெற்றிலை வைக்க ராஜநல்லூரில் பூதானம் செய்யப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. பூதானம் அளிக்கப்பட்ட இவ்வூர் தற்போது சீர்காழி அருகே ராதாநல்லூர் என அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்களில் பாக்குவெட்டிகள் கிடைத்துள்ளது. இவை மத்திய காலத்தை சேர்ந்தவை (கிபி.10-முதல் 14 ம் நூற்றாண்டு) இக்காலத்து முதலே காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துகிறது.
எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டாவை அடக்கியுள்ள மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது.
மருத்துவப் பயன்:
கருப்பு வெற்றிலை என்று கைமாறு வெற்றிலையே சித்த வைத்தியத்துக்கு மிகுந்தளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை கார வெற்றிலை எனவும், கைமாறு வெற்றிலை எனவும் அழைக்கப்படுகிறது. நாகவல்லி என்ற இலக்கியத்தில் நீலகண்ட இலை என்றும் மடக்குருவி என்றும் இதன் மருத்துவ குணம் கூறப்படுகிறது.
வெற்றிலையை சாறுபிழிந்து கண்ணில் இட்டால் கண் வலியும், காதில் இட்டால் காதுவலியும் நீங்கும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்புடன் வால் மிளகையும் கூட்டி சுவைத்தால் எளிதில் சீரனமானகும். வாய் துர்நாற்றம் நீக்கும். மனதுக்கு உற்சாகம் அளிக்கும். பற்கள் கரையாமல் அசைவு நீங்கு உறுதிதன்மை ஏற்படும்.
இலை, காம்பு, கொடி, வேர் ஆகிய வெற்றிலையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கண்ணின் இமைகள் அடிக்கடி துடித்தலுக்கு வெற்றிலை சாற்றில் சுக்கை உரத்தை கண்ணில் விட்டால் இமை துடித்தால் நிற்கும். வெற்றிலை, சுக்கு, மிளகு மென்று விழுங்கினால் வாயு தொல்லை நீங்கும். கருப்பு வெற்றிலையும், கற்பூர வல்லி இலையையும் அனலில் காட்டி சாறு பிழிந்து பூசினால் தலைவலி சில நிமிடங்களில் நீங்கும்.
உழவர்கள் குறிப்பாக தஞ்சாவூர் உழவர்கள் பயிரிடுவது முதல் அறுவடை செய்யும் காலம் வரை ஓய்வு நேரங்களில் அதிக நேரமாக முக்கியப் பணியாக வெற்றிலை பாக்கை போட்டு தன்னுடைய உற்சாகத்தை பேணிக் கொண்டனர். எனவே இந்த பகுதிகளில் தலைச்சிறந்து விளங்குகிறது. விருந்தோம்பலுக்கு தலைச்சிறந்து விளங்கும் மாவட்டமாக தஞ்சை மாவட்டத்தில் அனைத்து சுபகாரியங்கள், நிகழ்வுகளுக்கும் இந்த வெற்றிலை பாக்கு வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட அரசிதழில் கி.பி.1883 ம் ஆண்டு திவான்பகதூர் வெங்கடசாமி ராவ் என்பவர் இந்த கும்பகோணம் வெற்றிலையைப் பற்றியும், அதன்பிறகு கி.பி.2000, 2002ம் ஆண்டுகளில் அரசு நாளிதழ் மறுபதிப்பில் இந்த கும்பகோணம் வெற்றிலையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை அமைப்பு தன்மையில் மாறுபட்டிருக்கிறது. காவிரி படுகை நீர், மண் வளம், உழவர்களின் நுணுக்கமான உழைப்பு, தக்க சமயத்தில் பயிரிடும் முறை, பாரம்பரிய அறிவினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் முறை தான் இதனை வசப்படுத்தி தனது தனிசிறப்பை காட்டுகிறது.
விண்ணப்பம்: இத்தகைய சிறப்பு இந்த கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி விண்ணப்பித்துள்ளார். விரைவில் இதற்கான புவிசார் குறியீடு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தோவாளை மாணிக்கமாலை:
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை என்ற ஊர் உள்ளது. சங்கமிக்கும் இக்கடல் காற்றினால் இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்து காட்டுகிறது.
தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்படும், பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகளவில் உள்ளது. தோவாளையின் தெற்கே காற்றாடி மலை, வடக்கே தாடக மலை ஆகிய இரு குன்றுகளுக்கு இடையே இந்த ஊர் உள்ளதால், இந்த ஊருக்கான இயற்கையான தட்பவெட்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவை பூக்கள் விளைவிப்பதற்கும், பூக்கைளை பின்னுவதற்கும் சரியான சூழல் அமைந்துள்ளது. இந்த சூழலை இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் சரியாக பயன்படுத்தி தோவாளை மாணிக்கமாலையை உற்பத்தி செய்கிறார்கள்.
இந்த பூவை பார்ப்பதற்கு பட்டையாக பாய் விரித்தார்போல் இருக்கும். வெள்ளை அரளி, சிவப்பு அரளிப்பூ. இங்கு விளைகின்ற காட்சி கோலம் காண்போரை வியக்க வைக்கிறது. இந்த வெள்ளை அரளிப்பூவையும், சிவப்பு அரளிப்பூவையும் பறித்து சம அளவில் கட்டுகிறத போது அது மாணிக்கம் போன்று தோற்றமளிக்கும். அதனால் தான் இதற்கு மாணிக்கமாலை என பெயர் பெற்றது.
இந்த மாலையின் தொடக்கத்தில் நொச்சி இலையை பயன்படுத்தி, மாலை தொடுக்கப்படும். நான்கு சம்பா நார்களை இரு பக்கமாக பிரித்துக்கொண்டு பின்னுவார்கள். பின்னி முடிக்கப்பட்ட பூ தோற்றம் மாணிக்கத்தை வைத்தார்போல் இருக்கும். எனவே தான் மாணிக்கமாலை என அழைக்கப்பட்டாலும், திருவாங்கூர் மகராஜா இதனை பார்த்த பிறகு இந்த மாலையில் தங்கத்தின் மீது மாணிக்கத்தை வைத்தது போன்று உள்ளதாக குறிபிட்டுள்ளதனால் அன்றிலிருந்து இது தோவாளை மாணிக்கமாலை என அழைக்கப்படுகிறது.
அந்த மகராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க தோவாளையில் வசிக்கும் பல தலைமுறைக்கு முன்பாக தொடங்கிய பழனி பண்டாரம், லெட்சுமணன் பண்டாரம், மாடசாமி பண்டாரம், முத்துபெருமாள் பண்டாரம், வனிதா என்பவரது குடும்பம் தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் திருவிழாக்களுக்கு மாணிக்க மாலையை வழங்கி வருகின்றனர்.
இந்த பூமாலை தோன்றிய காலம் கி.பி.1050 என வரலாறு கூறுகிறது. சமீபத்தில் சீன அதிபர் தமிழகத்துக்கு அரசு முறைப்பயணமாக வந்தபோது, தமிழர்களின் கலைகளை விளக்கி கூறப்பட்டபோது, இந்த மாணிக்கமாலையை பார்த்து வியந்து அதிகநேரம் செலவிட்டார். இந்த மாணிக்கமாலையின் தனிச்சிறப்பை இந்தியாவின் பெரும் வர்த்தகர் முகேஷ் அம்பானி அவர்கள் தன்னுடைய வீ்ட்டு பூஜை அறை அலங்காரத்துக்காக இங்குள்ள கைவினைக் கலைஞர்களை அழைத்து ஒரு மாட மாளிகை முழுவதும் தோவாளை மாணிக்கமாலையில் அலங்கரித்தார்.
இந்த பூக்கள் தமிழகத்தில் பரவலாக விளைந்தாலும், இந்த ஊரில் உள்ள கைவினைகலைஞர்களுக்கு மட்டும் தான் சரியான கலைநுணுக்கத்தோடு, சரியான மடிப்புத் தன்மை மாறாமல், பூக்களின் பாகம் சேதமடையாமல் கட்டுகின்ற பாங்கு தான் இதனுடைய தனிச்சிறப்பை நிலைப்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் மலர்கள் கண்காட்சி நடைபெற்றபோது, இந்த தோவாளை மாணிக்கமாலைக்கு என்று சிறப்புகள் கிடைத்துள்ளது.
இதைய சிறப்பு பெற்ற தோவாளை மாணிக்கமாலையை தயாரித்தமைக்காக கைவினை கலைஞரான மாடசாமி பண்டாரம் தேசிய விருதை பெற்றுள்ளார்.
தற்போது சிறப்பு மிக்க இந்த தோவாளை மாணிக்கமாலையை, தோவாளை மாணிக்கமாலை கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு வழக்கறிஞரும், சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான ப.சஞ்சாய்காந்தி, புவிசார் குறியீடு பதிவகத்தில் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
=

You may also like...