குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். Cj order

மாநிலம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த பாலகுருகுலத்தில் தங்கியுள்ள 26 சிறுமிகள் உள்பட 38 குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை எனக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், குரு குலத்தில் மாற்றுத் திறனாளி குழந்தை இருந்த போதும், அந்த குழந்தைக்கு சிறப்பு ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லை. தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை, உளவியல் ஆலோசனை, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கவும், குடும்பத்துடன் இணைக்க வாய்ப்பு இருந்தால் குழந்தைகளை குடும்பத்தினருடன் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட அந்த குருகுலத்தின் உரிமம், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், 38 குழந்தைகள் மீட்கப்பட்டு, சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக குருகுலத்தின் நிர்வாகிக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குற்ற வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த அறிவுறுத்தினர்.

மேலும், மாநிலம் முழுவதும் செயல்படும் பால குருகுலங்கள், ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணித்து, குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மீட்கப்பட்ட 38 குழந்தைகளை ஒப்படைக்க கோரி குருகுலம் தாக்கல் செய்த வழக்கில், ஏற்கனவே உரிமம் ரத்யு செய்யப்பட்டு விட்டதாக அரசுத்தரப்பிலும்; உரிமம் காலாவதியாகிவிட்டதாக மனுதாரர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த மனுவை முடித்து வைத்தனர்.

மாவட்ட குழந்தைகள் நலக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு வாதத்துக்கு மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எந்தெந்த மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் இல்லை என்பதை தெரிவிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...