சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மனுதாரர் அளித்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை பதில்மனுவாக தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவி்ட்டு விசாரணையை வரும் டிச.14-க்கு தள்ளி வைத்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ சேலத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் உள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க சுகவனேஸ்வரர் கோயிலில் சேர, சோழ, பாண்டியர்களை நினைவுபடுத்தும் வகையில் தொல்லியல் நினைவுச்சின்னங்கள் உள்ளன. இந்த கோயிலில் அன்றாடம் நடைபெறும் பூஜை பரிகாரங்கள் எக்காரணம் கொண்டும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக உபயதாரர்கள் பலர் தங்களது சொத்துக்களை இந்த கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். டாக்டர் சுப்பராயன் சாலையில் உள்ள 6 ஆயிரத்து 600 சதுர அடி இடம் இந்த கோயிலுக்கு சொந்தமானது. ஆனால் இந்த இடத்தில் தனியார் போக்குவரத்து நிறுவனம் எந்தவொரு வாடகையும் கொடுக்காமல் அந்த நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த இடத்தை மீட்க கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வரை அந்த தனியார் நிறுவனம் கோயிலுக்கு செலுத்த வேண்டிய குத்தகை வாடகை பாக்கியாக ரூ. 1 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 824-ஐ நிலுவையில் வைத்துள்ளது. ஏற்கெனவே கோயில் நிர்வாகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், இந்த தொகையை வசூலிக்கும்படி கடந்த 2019 மே 14 மற்றும் 2023 ஜூலை 13 ஆகிய தேதிகளில் மனு அளித்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை. எனவே இந்த தொகையை வசூலிக்கவும், அந்த நிலத்தை மீட்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்பதை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்த பிறகும், அதை மீட்கவோ அல்லது வாடகை பாக்கியை வசூலிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து நீதிபதி, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மனுதாரர் அளித்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை பதில்மனுவாக தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவி்ட்டு விசாரணையை வரும் டிச.14-க்கு தள்ளி வைத்துள்ளார்.

You may also like...