தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்கள் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மொத்தமுள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்; 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்; 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை எனவும், காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி உரிமைச் சட்டப்படி இந்த பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிறப்பு பள்ளிகளுக்கு 90 ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும், தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சில விவரங்களை கோரி உள்ளதாகவும், அவை விரைவில் வழங்கப்பட்டு தேர்வு நடவடிக்கைகள் துவங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இடைப்பட்ட காலத்தில் தற்காலிகமாக 36 ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இது போன்ற விஷயங்களில் அரசு அவசரக்கதியில் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிய விவரங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தேர்வு நடைபெற நடவடிக்கைகளை தேர்வு வாரியம் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இடைப்பட்ட காலத்தில் 36 ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று அனுமதித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

You may also like...