தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, கடந்த 2017ம் ஆண்டே கூடுதல் ஊதியத் தொகையை திரும்பச் செலுத்திய மனுதாரர், மூன்று ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம், 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை திரும்ப கொடுக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றியவர் ஹேமலதா. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 2009ம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

ஆனால் 2009 ஜூன் முதல், 2015ம் ஆண்டு மார்ச் வரை அதிக ஊதியம் வழங்கியதாகக் கூறி, 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை திரும்ப வசூலிப்பது 2017ம் ஆண்டு ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை ஆசிரியர் ஹேமலதா செலுத்தினார். மூன்று ஆண்டுகளுக்கு பின், 2020ல், தன்னிடம் தவறுதலாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதாகக் கூறி, ஹேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்பக் கொடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, கடந்த 2017ம் ஆண்டே கூடுதல் ஊதியத் தொகையை திரும்பச் செலுத்திய மனுதாரர், மூன்று ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

You may also like...