திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமான மோதிய சம்பவம் தொடர்பான சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, உரிய முடிவை எடுக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே, தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தது.

விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல், சம்பந்தப்பட்ட விமானி கணேஷ்பாபுவின் உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, விமானி கணேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விமானி தரப்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தி கிஸ்தி ஆஜராகி, 2018ம் ஆண்டு வரை 4,270 மணிநேரம் விபத்தில்லாமல் விமானம் ஓட்டியதாகவும். தன் மீது எந்த குறைகளும் இல்லை என்றும்,
விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்தாக தெரிவித்திருந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து கழகம் சார்பில், விமானம் டேக் ஆஃப்பின் போது என்ஜின் உந்துதலைக் கண்காணிக்கத் தவறியதாகவும், சுற்றுச் சுவரைத் தொடர்ந்து, கனரக போக்குவரத்து வாகனங்கள் இயங்கும் மாநில நெடுஞ்சாலை உள்ளதால், கனரக வாகனத்தில் மோதியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. விமானம் சேதம் அடைந்த போதிலும், விமானத்தை திருச்சியிலேயே மீண்டும் தரையிறக்காமல், தொடர்ந்து பறக்கவிட்டு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆர். மகாதேவன் விமானியை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் நான்கு வாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...