நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு. temple case அதிரடி உத்தரவு

கோவில் அறங்காவலர்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தினால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரும், சிறப்பு பணி அதிகாரியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது அவர்கள், மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 473 கோவில்களில், அறங்காவலர்கள் பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 4 ஆயிரத்து 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்து 187 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

38 மாவட்டங்களிலும் மாவட்ட குழுக்கள் நியமிக்கப்பட்டது குறித்த விவரங்கள், நாளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் விளக்கமளித்தனர்.

மாவட்ட குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெரிய அளவி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதாகவும், அவர்கள் அரசியல் கட்சி சார்புள்ளவர்களாக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட குழுக்கள் நியமனம் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அதன் மூலம் பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்க முடியும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மாவட்ட குழுக்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாவட்ட குழுக்களில் அரசியல் சார்புள்ளவர்கள் நியமிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

பின்னர், மாவட்ட குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்ச் கூடாது எனவும், மீறினால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், இரு அதிகாரிகளும் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...