நீதிபதி வி.லட்சுமி நாராயணன், விபத்து வழக்குகளில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய ஆறு மாத கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும்

விபத்து தொடர்பாக இழப்பீடு கோரி தாமதமாக தாக்கல் செய்யப்படும் மனுக்களை நிராகரிக்காமல், விபத்து தொடர்பாக காவல்துறை அனுப்பி வைக்கும் முதல் தகவல் அறிக்கையையே இழப்பீடு கோரிய மனுவாக பாவித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை ஒரகடத்தைச் சேர்ந்த மலரவன் என்பவர், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வீடு திரும்பிய போது, தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்ற பின், இழப்பீடு வழங்கக் கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், சட்டப்படியான ஆறு மாத காலம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறி, அந்த மனுவை திருப்பி அனுப்பி, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மலரவன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், விபத்து வழக்குகளில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய ஆறு மாத கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படியும், சட்டப்படியும், தமிழக அரசின் விதிகளின்படியும், விபத்து குறித்து காவல்துறையினர் அனுப்பி வைக்கும் அறிக்கையை விபத்துக்கு இழப்பீடு கோரும் மனுவாக பாவித்து தீர்ப்பாயங்கள் விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையிலும் இழப்பீடு கோரிய வழக்குகளை தீர்ப்பாயங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் இழப்பீடு கோரிய மனுவை நிராகரித்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அவரது மனுவை, நினைவூட்டலாக கருதி, விசாரணையை தொடங்கவும் தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...