பெயர் மாற்றம் செய்து தன்மீதான கிரிமினல் வழக்கை மறைத்ததாக இளைஞருக்கு கான்ஸ்டபிள் பதவி வழங்க மறுத்த கடலூர் மாவட்ட எஸ்பியின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் இளைஞருக்கு பணி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஆக. 4: பெயர் மாற்றம் செய்து தன்மீதான கிரிமினல் வழக்கை மறைத்ததாக இளைஞருக்கு கான்ஸ்டபிள் பதவி வழங்க மறுத்த கடலூர் மாவட்ட எஸ்பியின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் இளைஞருக்கு பணி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.விஜய். இவர் கடலூர் மாவட்டத்தில் கிரேட் 2 போலீஸ் கான்ஸ்டபிளுக்கான தேர்வு எழுதினார். எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இவர் தனது பணி நியமனத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில் விஜய் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடலூர் எஸ்பிக்கு கடந்த 2017 ெசப்டம்பரில் தகவல் தந்தது. இதையடுத்து, அவருக்கு பணி நியமனம் வழங்க முடியாது என்று கடலூர் எஸ்பி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும் தனக்கு பணி வழங்க கோரியும் விஜய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ரவி ஆஜராகி, மனுதாரர் குற்ற வழக்களில் ஈடுபடவில்லை. அவருக்கு வேறு எந்த புனை பெயர்களும் கிடையாது. விஜய் என்ற பெயரில் எப்ஐஆர் எதுவும் சம்மந்தப்பட்ட காவல் நிலையில் பதியபடவில்லை என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, தூக்கணாபுரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த மனுவில் மனுதாரர் விஜயின் பெயர் எப்ஐ
ஆரில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் குடும்பத்தினருக்கும் அண்டை வீட்டை சேர்ந்த முத்துவேலுக்கும் ஏற்பட்ட சிறு வாய்தகராறு மீது முத்துவேல் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விசாரணையின்போது மனுதாரர் அவரது வழக்கறிஞரின் அறிவுறுத்தலின்படி தனது பெயரை பாலசுந்தரம் என்று தெரிவித்துள்ளார். அதே பெயரில் ஜாமீனும் பெற்றுள்ளார் என்று அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் வாதிட்டுள்ளார்.
மனுதாரரின் பள்ளி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அவரது பெயர் விஜய் என்று தெரியவருகிறது. எந்த இடத்திலும் பாலசுந்தரம் என்ற பெயர் இடம்பெறவில்லை. அருகில் வசிப்பவர்களும் அவரது பெயர் விஜய் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர். அதனால் அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கான்ஸ்டபிள் கிரேட்-2 பதவிக்கு தகுதியானவர்தான். எனவே, அவருக்கு பணி நியமனம் வழங்க மறுத்த கடலூர் எஸ்பியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கிரேட் 2 கான்ஸ்டபிள் பணி காலியிருந்தால் அவருக்கு பணி வழங்க வேண்டும். இல்லையென்றால், காலி இடம் வரும்போது மனுதாரருக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என்று உத்தரவிட்டார்.

You may also like...