விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  1. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காகிதக் கூழ் மற்றும் களிமண்ணால் சிலை தயாரிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகன் தாக்கல் செய்த மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காகித கூழ் மற்றும் களி மண் போன்ற பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமலும், சட்டவிதிகளை பின்பற்றாமலும் தங்கள் தொழிலில் காவல் துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் இடையூறு செய்வதுடன், சீல் வைத்து மூடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சில இடங்களில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டும், மனிதாபிமானமற்ற முறையில் கலைஞர்கள் தாக்கப்பட்டதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, சட்டரீதியான நடவடிக்கைகள் பின்பற்றாமல் விநாயகர் சிலை தயாரிப்பவர்களின் தொழிலில் இடையூறு ஏற்படுத்த கூடாது என தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் அஸ்வத்தாமன், அரசு தரப்பில் கிருஷ்ணராஜா ஆகியோர் ஆஜரானார்கள்.

வழக்கு குறித்து ஒரு வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...