Judge G jayachandren order to file final report# எச்சரிக்கை/ கனியாமூர் பள்ளி

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி ப்ளஸ் 2 மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13 ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2022 ஜூலை 17ம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, பள்ளி தாளாளர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணை முறையாக நடந்து வருகிறது. திருடப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவை மீட்கப்பட்டுள்ளன. வழக்கில் நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, நான்கு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை மீட்கவும் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

உத்தரவை மீறினால், பள்ளி நிர்வாகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...