Actor விக்ரம் படத்துக்கு கெடு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, பரபரப்பு வாதம்

சிம்புவின் படத்திற்காக ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை நாளை காலை 10.30 மணிக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டுமென இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு கொடுக்காவிட்டால் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்தை வெளியிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், சிம்புவை நாயகனாக வைத்து “சூப்பர் ஸ்டார்” என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018ம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாக கூறியுள்ளார்.

ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே தம்மிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி,

துருவ நட்சத்திரம் படத்தின் வினியோக உரிமையை விற்றதன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ள போதிலும், தங்களுக்கு பணத்தை திரும்ப அளிக்கவில்லை என கூறினார்.

கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நாளை காலை பத்தரை மணிக்குள் இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா மற்றும் வெளிநாடு என எங்கும் வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...