Cctv case train cj bench order தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அதிருப்தி சிசிடிவி ரெயில்வே

ரயில் தமிழகத்தில் உள்ள 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை எனவும், ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் அக்கறையில்லை எனவும் ரயில்வே துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மென்பொறியாளர் சுவாதி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் மொத்தம் உள்ள 442 ரயில் நிலையங்களில் 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024 – 25ம் மிதி ஆண்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் ரயில்வே துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கை, ரயில் நிலையங்களின் பாதுகாப்பில் ரயில்வே நிர்வாகத்தின் அக்கறையின்மையை காட்டுவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு இவ்வளவு நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்வது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுவதால் இந்த கால அவகாசம் தேவைப்படுவதாக ரயில்வே துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏழரை ஆண்டுகள் கடந்தும் 10 சதவீத ரயில் நிலையங்களில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடைமுறையை விரைவு படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இது போன்ற விஷயங்களுக்கு நிதியை காரணம் காட்டக்கூடாது என்றும், எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், அதற்கான கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும் என்றும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like...