கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம். Navj அதிர்ச்சி கோர்ட்டில் பரபரப்பு add pp தாமோதரன்

கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நபர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட உறவினர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இயந்திர தனமாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததாக கீழமை நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்தது.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நந்த கிஷோர் சந்தக் என்பவர், தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஏழு கிணறு போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நந்த கிஷோர் சந்தக்-ன் உறவினரான
கீழ்பாக்கத்தை சேர்ந்த ராதேஷ் ஷியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேர் மீது 2017ஆம் ஆண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலில் கொலை மிரட்டல் என வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, மூன்றாவது முறையாக பிரிவில் மாற்றம் செய்த போலீசார், கொலை வழக்காக பதிவு செய்தனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி
ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில்,
நந்த கிஷோர் சந்தக் தனது சித்தப்பா எனவும், தங்களுக்கிடையே குடும்ப சொத்து பாகப்பிரிவினை பிரச்னைகள் காரணமாகவே இந்த புகார் அளித்துள்ளதாகவும், தற்போது இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் ராதேஷ் சியாம் சந்தேக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராதேஷ் தரப்பு வழக்கறிஞர்,
நந்த கிஷோர் சந்தக் கொல்லப்படவில்லை எனவும் அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் இங்கு உள்ள நிலையில் பின்னர் எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதி, நந்த கிஷோர் சந்தக்-கை பார்த்து “கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களை பார்த்துக் கொள்கிறேன்” என நகைச்சுவையாக கூற நீதிமன்ற அறையில் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையடுத்து, இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாக்கும் என
அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், இயந்திர தனமாக செயல்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...