cj bench மருத்துவ மேற்படிப்பு படிப்பின் போது, மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்குவதற்கு மருத்துவ கல்லூரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு படிப்பின் போது, மாணவர்கள் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்குவதற்கு மருத்துவ கல்லூரிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள், தாங்கள் படிக்கும் காலத்தில் மருத்துவமனைகளில் ஆற்றிய பணிக்கான உதவித்தொகையை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நான்கு வாரங்களில் மாணவர்களுக்குரிய உதவித்தொகையை வழங்க வேண்டும் என மருத்துவ கல்லூரிகளுக்கு 2021ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

மாணவர்கள் தங்கள் படிப்பு கட்டணத்தை செலுத்தாததால், உதவித்தொகை கோர உரிமையில்லை என மருத்துவ கல்லூரிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

கட்டணம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்கில் கல்லூரிகளுக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டால், தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்ட மாணவர்களிடம் இருந்து வசூலிப்பது சிரமம் எனவும் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்காலிகமாக கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், அதுவும் அதிகமாகவே செலுத்தியுள்ளதாகவும், மூன்று ஆண்டுகள் தங்களிடம் இருந்து உழைப்பை பெற்றுக் கொண்ட நிலையில் உதவித்தொகை வழங்க மறுக்க முடியாது என மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கல்லூரிகள் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்படி கல்விக் கட்டணத்தைச் செலுத்தியுள்ள மாணவர்கள், கூடுதல் கட்டணத்தை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், அவர்ளுக்கு உதவித்தொகை வழங்க முடியாது என மருத்துவ கல்லூரிகள் கூற முடியாது எனத் தெரிவித்து, விதிகளின்படி ஆறு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையை வழங்க வேண்டும் என மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

You may also like...