Judge jayachandren சரமாரி கேள்வி தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை நாளை பிற்பகலுக்குள் மறுபரிசீலனை

தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை நாளை பிற்பகலுக்குள் மறுபரிசீலனை செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஸ்ரீசாய் விவாக மகால் என்ற உள்ளரங்கில் புரபஷனல்ஸ் இன் பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

உள்ளரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, துரோணாச்சாரியார் விருது பெற்ற செஸ் பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கோவை உதவி தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ஸ்ரீ தர்மராகவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்து நாளை பிற்பகலுக்குப் பின் புதிய உத்தரவு பிறப்பி்க்கப்படும் எனவும், அந்த விண்ணப்பம் சட்டம் ஒழுங்கு அடிப்படையில் அல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என விளக்கம் அளித்தார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால், இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்வதாக இருந்தால் காவல் துறையின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இருந்தால் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கலாம். ஆனால், உள்ளரங்கில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு? காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கை பேணும் தகுதி இல்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், தொடர்ச்சியாக இதே போல சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டினால், அரசியல் சட்ட முடக்கம் என உத்தரவில் கருத்து தெரிவிக்க வேண்டி வரும் என எச்சரித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இதுபோன்ற விவகாரங்களை தேர்தல் ஆணையம் கவனித்துக் கொள்ளும் எனக் கூறினார்.

பின்னர், தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை பதிவு செய்த நீதிபதி, நாளை பிற்பகல் 1:30 மணிக்குள் அனுமதி மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்து, புதிய உத்தரவு பிறப்பிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...