Judge tickaraman no ab in mbbs seat cheating case விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு வாய்ப்பு அளித்தும், அவர் ஆஜராக வில்லை என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் வாங்கித் தருவதாக கூறி, 14 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், டில்லி மருத்துவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து, டில்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் ஜோஹிதாதித்யா, உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் பெற்றுத் தருவதாக கூறி, நவீன் வர்ஷா என்பவரின் தந்தையிடம், 7.41 லட்சம் ரூபாயும், கவியரசு என்பவரது தந்தையிடம் 7.55 லட்சம் ரூபாயும் பெற்று மோசடி செய்ததாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் ஜோஹிதாதித்யா, அவரது தந்தை மீது இரு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி டாக்டர் ஜோஹிதாதித்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2018ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக 2019ம் ஆண்டு தான் புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும்,
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க இடம் வாங்கிக் கொடுக்கப்பட்டதாகவும், படிப்புக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், மனுதாரரை விசாரணைக்கு ஆஜராகும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41-ன்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி டீக்காராமன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் விசாரணைக்காக போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராக வில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரருக்கு வாய்ப்பு அளித்தும், அவர் ஆஜராக வில்லை என்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...