Sivasanker baba case Navj directed add pp damodaran to file report

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கர் பாபா நடத்தி வந்த சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவி ஒருவர், 2015ம் ஆண்டில் பிறந்தநாளுக்கு ஆசி வாங்க சென்ற போது, ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுசம்பந்தமாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 2021ம் ஆண்டு தொடக்கத்தில் பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது எனவும், அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக, முறையான விசாரணை இன்றி, தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புகாரளித்த பிறகு பள்ளியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் அந்த பெண் கலந்து கொண்டதை குறிப்பிட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...