Madras high court orders nov 8

[11/7, 21:30] Sekarreporter 1: செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் ராஜா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பதிவாளரான ராஜா, நில அபகரிப்பாகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோர்த்து சட்ட விரோதமாக செயல்படுவதாகவும், கையெழுத்து ஏதுமில்லாத மொட்டை கடிதங்களை விசாரணைக்கு எடுத்து, பத்திர பதிவுகளை ரத்து செய்தும், நிலங்களை விற்பனை செய்ய முடியாது அளவிற்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரவு பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், பதிவாளர் ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராயப்பேட்டையை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், புகார் குறித்து முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே முறைகேடு குறித்த முழு விவரங்களும் வெளியில் வரும் எனவும் ராஜா மீது பல புகார்கள் வந்துள்ளதால் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், முறைகேடு நடைபெற்றதற்கான போதிய முகாந்திரம் உள்ளதால், சட்டப்படி அரசிடம் அனுமதி பெற்று விசாரணை நடத்தி, ராஜா சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
[11/8, 11:05] Sekarreporter 1: சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அனைத்து உணவகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். நடராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் கடந்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 12 சதவீதத்திற்கும் மேலான உணவகங்கள் போதுமான அளவு தரத்துடன் செயல்படவில்லை என தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

பல உணவகங்களின் சமையலறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் போது உரிய சுத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் உணவருந்திய சிலருக்கு உணவு விஷமாகி இறந்த சம்பவங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளின் சமையல் அறைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், உணவு சமைப்பதை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோ அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவித்ரா, ஹோட்களில் தரமான சுகாதாரமான பாதுகாப்பான உணவு வகைகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் முறையாக சோதனை செய்ய வேண்டும் என்றும், சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால் வழக்கை விசாரித்து நீதிபதிகள், பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல ஹோட்டல்கள் செயல்பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கையில் சாத்தியமில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
[11/8, 16:12] Sekarreporter 1: டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, புகார்தாரரான அறப்போர் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ் வாதங்களை முன் வைத்தார்.

அப்போது அவர், பொத்தாம் பொதுவாக அல்லாமல், குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்கள் கூறி அளிக்கப்பட்ட புகாருக்கு ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய அரசு உள்நோக்கத்துடன் வழக்குபதிவு செய்துள்ளதாக அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு எனவும், முந்தைய அரசும், லஞ்ச ஒழிப்புத் துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்கு சொந்தனான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து இந்த டெண்டர்கள் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

அரசு அதிகாரிகளுக்கு வேலுமணியின் நண்பர் கே.சந்திரசேகர் உத்தரவுகளை பிறப்பித்ததாகவும், அதனடிப்படையில், சிறு ஒப்பந்ததாரர்களின் டெண்டர்கள் எவ்வித காரணமும் கூறாமல் ரத்து செய்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

முறைகேடாக டெண்டர் ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும், அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில், நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய் என்பதை 20 கோடியாக மாற்றி அமைத்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிட்டார்.

எஸ்.பி.வேலுமணி தரப்பில், தனக்கெதிரான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. அறிக்கை அளித்ததாகவும், அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பியதாகவும், அதை ஆராய்ந்த தமிழக அரசு 2020ஆம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்ததாக வாதிடப்பட்டது.

ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும், டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்குப்பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

டெண்டர் ஒதுக்கீடு தொடர்பாக அப்போதைய எதிர்கட்சி மாநகராட்சி உறுப்பினர்கள் கூட எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், உள்நோக்கத்துடன் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வேலுமணி தாக்கல் செய்திருந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

[11/8, 17:30] Sekarreporter 1: மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ. எழிலனின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எந்த நோக்கத்துக்காக, காரணத்துக்காக இந்த அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவிக்கப்படவில்லை எனவும், 1978ல் 45வது அரசியல் சாசன திருத்தம் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, கல்வி மீண்டும் மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது எனவும், கல்வியை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலில் சேர்த்தது கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது என வாதிட்டார்.

தமிழகம் மட்டுமல்லாமல் எந்த மாநிலமாக இருந்தாலும் கல்வி சம்பந்தமாக இயற்றும் சட்டங்களை, டில்லியில் உள்ள அதிகாரி செல்லாததாக்க முடியும் என்பதால் இந்த திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது என்றார்.

லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு பின் தொன்மையான மொழியான சமஸ்கிருதத்தை ஒரு மொழியாக கற்பித்துக் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால், கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் வரை கூட்டாட்சி கொள்கை முழுவதுமாக கைவிடப்படுகிறது எனத் தெரிவித்தார்.

என் சி இ ஆர் டி பாட திட்டத்தின் அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதும் கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது எனவும், அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டியது அவசியம் என விவாதங்கள் நடந்ததாக சுட்டிக்காட்டிய அவர், பொதுப்பட்டியலில் கல்வி இருப்பது அதன் நலனுக்கு விரோதமானது என்பதால் இந்த திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி வாதங்களை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குழந்தையின் கல்வி குறித்து அக்கறை கொள்பவர் பெற்றோர் தான் எனவும், எந்த மொழியில் குழந்தையை படிக்க வைக்கலாம் என பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல எனவும், குழந்தையை பள்ளியில் சேர்க்க மட்டுமே மாநில அரசு வகை செய்யலாம் எனவும் வாதிட்டார்.

குழந்தைகள் இந்தி தான் படிக்க வேண்டும் எனக் கூறினால் அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றார்.

உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசின் தலைமைச் செயலகமான டில்லி நார்த் பிளாக்கில் இருந்து கொண்டு, நாட்டில் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில் தான் படிக்க வேண்டும் என முடிவெடுக்க முடியாது என்றார்.

தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி எந்த மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என பார்லிமெண்ட் சட்டம் இயற்ற முடியாது எனவும், மருத்துவ படிப்பு இந்தியில் வழங்கப்படும் என நார்த் பிளாக் அறிவித்துள்ளதாகவும்,
இதை அனுமதித்தால் ஒரு நாள் தமிழக மாணவரும் இந்தியில் மருத்துவம் படிக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தில் பொது ஒழுங்கு என்ற வார்த்தையைச் சேர்த்து கொண்டு வரப்பட்ட முதல் திருத்தத்துக்கு எதிராக தற்போது தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறி, 46 ஆண்டுகளுக்கு முந்தைய திருத்தத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதை நியாயப்படுத்தினார்.

கல்வி அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமான கொள்கையல்ல எனவும், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக்கூடிய கலாச்சாரம் கொண்டுள்ள நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் கற்க வேண்டும், எந்த பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

கல்வியின் தரத்தை தீர்மானிக்க மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்ட கபில்சிபல், மருத்துவம், பொறியியல் புத்தகங்கள் இந்தியில் வரப்போவது மிகவும் மோசமானது எனவும், ஒரே மாதிரியானது என எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தன்னாட்சி அந்தஸ்து உள்ளது என்பதால் மாநிலத்தின் கல்வி குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே தகுதி உள்ளது என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பிலான அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like...