mhc சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது. அதேநேரம், அந்த சிந்தனை, கருத்தை வெளிப்படுத்தும் விதத்தின் மீதுதான் காப்புரிமை கோர முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புகளில் கூறியுள்ளது

சிந்தனை கருத்துகளின் மீது காப்புரிமை கோர முடியாது
ஐகோர்ட்டு தீர்ப்பு
சென்னை, ஜூன்.22-
சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது என்று கூறி எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி ரூ. 1 கோடி கேட்டு எழுத்தாளர் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எந்திரன்
நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளி வந்த படம் ‘எந்திரன்’. இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை ஐகோர்ட்டில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில், இனிய உதயம் என்ற இதழில் 1996-ம் ஆண்டு ஜூகிபா என்ற பெயரிலும், 2007-ம் ஆண்டு திக்திக் தீபிகா என்ற நாவலிலும் எழுதிய கதையை தன் அனுமதியில்லாமல் ‘எந்திரன்’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு ஷங்கர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
சுமார் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி, வக்கீல் டி.சாய்குமரன், சினேகா, கிரீஸ் நீலகண்டன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
ரோபோ காதல்
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
ராபின் என்ற விஞ்ஞானி ஜூகிபா என்ற ரோபோவை உருவாக்கிறார். அந்த ரோபோ, ராபினின் காதலி ஜோஸ்பின் மீது காதல் கொள்கிறது. ஆனால், எந்திரமான ரோபோ, ரத்தமும் சதையுமாக இருக்கும் ஜோஸ்பினுடன் வாழ முடியாது என்றதும், வேதனையில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறது என்று ஜூகிபா கதை எழுதப்பட்டுள்ளது.
ஆனால், எந்திரன் படத்தில் விஞ்ஞானி, இந்திய ராணுவத்துக்காக தன்னை போல உருவம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குகிறார். முதலில் உணர்வுகள் எதுவும் அந்த ரோபோவுக்கு இல்லை. பின்னர் மனித உணர்வுகள் வந்து கதாநாயகியை காதலிக்கிறது.
வன்முறை
இதனால், பிரித்து போடப்பட்ட அந்த ரோபோவை மீண்டும் சேர்த்து, சாப்ட்வேர் சிப் ஒன்றை வில்லன் பொருத்துகிறார். அந்த ரோபோவை வன்முறையில் ஈடுபட வைக்கிறார். ஒருக்கட்டத்தில் அந்த ரோபோ தன்னை போல பல ரோபோக்களை உருவாக்கி மனிதர்களுடன் சண்டை போடுகிறது. அந்த சாப்ட்வேர் சிப்பை அகற்றியதும் அது சாதாரணமாக மாறி விடுகிறது. இறுதியில் கோர்ட்டு உத்தரவின்படி அந்த ரோபோ அழிக்கப்படுகிறது என்று கதை எழுதப்பட்டுள்ளது.
இந்த இரு கதையும் ஒன்று அல்ல. இதுபோன்ற பல திரைப்படம் 1962-ம் ஆண்டு முதலே வெளியாகியுள்ளது என்றும் ஷங்கர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சிந்தனை
இந்த வழக்கில் மனுதாரரிடம் நடத்திய குறுக்கு விசாரணையில், ராணுவத்துக்கு உதவியாக விஞ்ஞானியை போல ரோபோ தன் கதையில் உருவாக்கப்படவில்லை. எந்திரன் படத்தில் ரோபோ பிரித்து குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. கடைசியில் அழிக்கப்படுகிறது. ஆனால், தன் கதையில் ரோபோ தற்கொலை செய்துக் கொள்கிறது என்று ஒப்புக் கொண்டார்.
இதுபோல இரு கதைகளுக்கும் ஏராளமாக முரண்பாடுகள் உள்ளன. சிந்தனை, கருத்து ஆகியவற்றின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது. அதேநேரம், அந்த சிந்தனை, கருத்தை வெளிப்படுத்தும் விதத்தின் மீதுதான் காப்புரிமை கோர முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புகளில் கூறியுள்ளது. ஒரே சிந்தனை பல விதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
வித்தியாசம் உள்ளது
இந்த வழக்கை பொறுத்தவரை இருவரும் மனித ரோபோவை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளனர். இரு கதைகளுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. எனவே, மனுதாரரின் கதையை அப்படியே எந்திரன் படமாக எதிர்மனுதாரர் ஷங்கர் எடுத்துள்ளார் என்று நிரூபிக்க வில்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர் ஷங்கர் செய்துள்ள செலவுத் தொகையை மனுதாரர் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

 

 

advt for enthiren director sankerb arum c mohan

for producer dv shenega
………….

You may also like...