Ponmudi case Judge jaya chandren full order in tamil

ஆதாரங்களை முழுமையாக ஆராயாமல், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு அப்பட்டமான தவறு மட்டுமல்லாமல் வெளிப்படையான பிழை என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மேலோட்டமாக விசாரித்துள்ளது; பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரது வருமானத்தை தனித்தனியாக கணக்கிட்டு, இரண்டு பேர் வருமானத்தை ஒன்றாக சேர்த்து விசாரிக்க முடியாது என்ற சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு அடிப்படையிலேயே தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது ஊழியரான அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி, கணவருக்கு வந்த வருமானத்தில் தன் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்; அவருக்கு ஏற்கனவே உள்ள மூலதன வருமானம் மூலமே இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டன என்பதை சிறப்பு நீதிமன்றம் முதலில் கண்டறிந்து இருக்க வேண்டும்; ஆனால், 2006 – 11 வரையிலான 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, அவரது மூலதன வருமானத்தில் இருந்து வாங்க முடியாது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த ஆதாரங்களை சிறப்பு நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பொன்முடி தன் மனைவி விசாலாட்சி பெயரில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கியுள்ளார் என்பதற்கு ஏராளமான சந்தேகம் கொள்ள நம்பத்தகுந்த காரணங்கள் இருந்தும் அதை ஏற்காமல் சிறப்பு நீதிமன்றம், வருமான வரிக் கணக்கை ஏற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளது; ஆதாரங்களை ஆராயாமல் சிறப்பு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு, அப்பட்டமான தவறு மட்டுமல்லாமல் வெளிப்படையான பிழை என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

பொன்முடி, விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த சுதந்திரமான ஆதாரங்களை பரிசீலிக்காமல் இருவரையும் விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது; 2006- 11ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 72 லட்சத்து 63 ஆயிரத்து 468 ரூபாய், அதாவது வருமானத்தை விட 64.90 சவீதத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது எனக் கூறி, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து அவர்களுக்கு வழங்கும் தண்டனை குறித்து அவர்களது கருத்தை கேட்கப்பதற்காக இருவரும் டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...