Posco case 10 years RI

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளைஞர் நிர்பய்குமார், சென்னை அடையாறில் கல்வி நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நிர்பய்குமாரை அடையாறு காவல் நிலையத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இத்தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் பி.ஆர்த்தி ஆஜராகி இளம்பெண்ணிற்கு காவலாளி நிர்பய்குமார் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் வலுவாக இருப்பதாக எடுத்துரைத்தார்

பின்னர் இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், நிர்பய்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராத தொகையிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளர்.

You may also like...