senthil balaji case நீங்க தான் விசாரிக்கனும். அதிரடி உத்தரவு by. நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மட்டுமின்றி வழக்கின் முழு விசாரணயையும் சென்னை முதன்மை அமர்வு  நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14ம் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து எந்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, சிறப்பு நீதிமன்றமோ அல்லது முதன்மை அமர்வு நீதிமன்றமோ யாரேனும் ஒருவர் ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மேலும், செந்தில் பலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விரைவில் ஜாமீன் தேவைப்படுவதால் ஜாமீன் மனுவை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் என்.ஆர். இளங்கோ கோரிக்கை விடுத்தார்.

இந்த நீதிமன்றம் தான் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டுமென்ற எந்த விருப்பமும் தங்களுக்கு இல்லை என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ் கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவு 4ந் கீழ் தண்டனை தரக்கூடிய வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட பிரிவு 43 (1) ந் படி சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்

மாநில அரசின் அரசாணை படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசின் அறிவிப்பாணை படி சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் படி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினர்.

அரசாணையால் சட்டத்தை மீற முடியாது என தெரிவித்த நீதிபதிகள் எனவே செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மட்டுமின்றி முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், செந்தில் பாலாஜியின் வழக்கின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் அந்த ஆவணங்களை திரும்ப பெறுமாறும் உத்தரவிட்டனர்.

ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை விரைந்து விசாரித்து முடிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...