Velmurugan judge மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த சுதந்திர தினத்தன்று திருச்செங்கோடு காவல் நிலையத்தினர் கருமக கவுண்டம்பாளையத்தில் உள்ள ராஜா சித்த மருத்துவமனை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஹோண்டோ டியோ வாகனத்தை சோதனை செய்துள்ளனர். கிருபாகரன் என்பவர் ஓட்டி வந்த அந்த வாகனத்தில் 96 பிராந்தி பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நாளில் மதுபாட்டில்கள் கடத்தபட்டதால், அவற்றை பறிமுதல் செய்ததுடன், வாகனத்தையும் கைப்பற்றி கிருபாகரன் மீதும், வாகன உரிமையாளர் அய்யப்பன் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மதுபானம் எடுத்து சென்றதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதால் வாகனத்தை மீண்டும் ஒப்படைக்கக்கோரி அய்யப்பன் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு செப்டம்பர் 15ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து, வாகனத்தை திருப்பி தர உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யபன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றதற்கு தொடர்பில்லை என்பதாலும், பல்வேறு பருவநிலைகளிலும் திறந்தவெளியில் வாகனத்தை போட்டு போட்டுவைத்துள்ளதாலும் வாகனத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் சட்டவிரோத மதுபான கடத்தலுக்கு வாகனம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், விசாரணை முடியும்வரை வாகனத்தை கொடுக்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கவனிப்பாரின்றி கிடக்கும் வாகனத்தின் நிலையையும், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசே மதுபான விற்பனை செய்துவருவதை கருத்தில் கொண்டும், அய்யப்பனின் வாகனத்தை திருப்பி கொடுக்கும்படி திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். வாகனத்தின் ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், வாகனத்தில் மாற்றங்கள் செய்யக்கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது வாகனத்தை எடுத்துவர வேண்டும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் 25 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும், சட்டவிரோத செயல்களுக்கு வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க சேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இவற்றின் அடிப்படையில், வாகனத்தை விடுவிக்க மறுத்த திருச்செங்கோடு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...