கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். pj அல்லி court

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40,600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகை விரைவில் எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படும் எனவும், அதன்பின், இந்த வழக்கு சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

You may also like...