கொகைன்’ கடத்திய வழக்கில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.செல்லத்துரை

சென்னை, செப்.30–
பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில், ‘கொகைன்’ கடத்திய வழக்கில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரேசில் தலைநகர் சாவ் பாலோவில் இருந்து, சென்னைக்கு வரும் ‘எமிரேட்ஸ்’ விமானத்தில், போதைப்பொருள் கடத்தி வருவதாக, தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு, 2018 மே 5ல் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில், ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சென்னை மண்டல அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர், ”ட்ராலி பேக்’கில் உணவு பொருட்களுடன் மறைத்து வைத்திருந்த, 1.8 கிலோ கிராம் எடையுள்ள ‘கொகைனை’ பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ‘கொகைன்’ கடத்தி வந்தது போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த டொமிங்கோஸ் மென்டிஸ் அபோன்சோ,53 என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக, அவர் மீது, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.செல்லத்துரை ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
வழக்கில் தொடர்புடைய நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, டொமிங்கோஸ் மென்டிஸ் அபோன்சோவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like...